சென்னை: தமிழ்நாடு அரசின் 2021-22 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட ரூ.2,756 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி இன்று (டிசம்பர் 3) ரூ.2,756 கோடி கடனைத் தள்ளுபடி செய்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடன்கள் ரத்துசெய்யப்படுகின்றன. அதன்படி, 2021 மார்ச் 31ஆம் தேதி வரையில் நிலுவையில் உள்ள ரூ.2,756 கோடி கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதற்காக முதல்கட்டமாக ரூ.600 கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கூட்டுறவுச் சங்கங்களில் ஐந்து சவரன் வரை அடகு வைக்கப்பட்ட நகைக் கடன்களைத் தள்ளுபடி செய்து அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி, கூட்டுறவு நிறுவனங்களில் வழங்கப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக் கடன்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்படும். மார்ச் 31 அன்று நிலுவையில் இருந்த மகளிர் சுய உதவிக்குழு கடன்களுக்கான அசல், வட்டி மட்டும் முழுமையாகத் தள்ளுபடிசெய்யப்படும்.
மார்ச் 31 அன்று மகளிர் சுய உதவிக் குழுக்களின் கடன் கணக்கில் நிலுவையில் இருந்து, தள்ளுபடிக்கான அரசாணை வெளியிடப்படும் நாள் வரை அக்குழுவால் கடன்தொகை பகுதியாகச் செலுத்தப்பட்டு இருப்பின் அத்தொகை போக எஞ்சிய தொகை மட்டும் தள்ளுபடி செய்யப்படும்.
தள்ளுபடி, மானியத் திட்டத்தின்கீழ் கடன் வழங்கப்பட்டிருப்பின் அரசு மானியம் தவிர்த்து மீதமுள்ள தொகை தள்ளுபடி செய்யப்படும். தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட குடும்ப அட்டை, ஆதார் விவரங்களைச் சரியாக அளிப்பவர்கள் மட்டுமே தள்ளுபடி செய்ய தகுதி உடையவர்கள்.