சென்னை மந்தைவெளி பெரிய பள்ளி தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் தமீம் அன்சாரி (40). இவர் கடந்த மாதம் 20ஆம் தேதி பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனது வீட்டில் வைத்திருந்த 51 லட்சம் ரூபாய் காணாமல் போனதாகவும், அதனைக் கண்டுபிடித்துத் தருமாறும் குறிப்பிட்டிருந்தார்.
முன்னதாக பணம் திருடுபோகும் நாளில், தமீம் அன்சாரியின் உறவினர் மகன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது. அந்த நேரத்தில் காணாமல்போனதால் உறவினர்கள் யாராவது திருடியிருக்கலாம் எனத் தமீம் அன்சாரி சந்தேகமடைந்தார்.
அதன்பின் தமீம் அன்சாரி மனைவி கன்ஸீம், பணத்தைத் திருடியது அன்சாரியின் தங்கை கணவர் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதை தனது மகன் பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கறுப்புப் பையில் எடுத்துச் சென்றதாகவும் கன்ஸீம் மகன் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து அன்சாரியின் தங்கை கணவரை காவல் துறையினர் விசாரித்தபோது, தான் திருடவில்லை எனக் கூறியுள்ளார். இதனையடுத்து கன்ஸீம் மகனை விசாரித்தபோது, தனது தாய் அவ்வாறு கூறச் சொன்னதாக காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
அதன்பின் அன்சாரியின் மனைவி கன்ஸீமை விசாரணை செய்துள்ளனர். இந்நிலையில் காவல் துறையினர் தன்னை தொந்தரவு செய்வதாகவும், தனது செல்போனை தேவையில்லாமல் ஆய்வுசெய்வதாகவும் மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து கன்ஸீம் மீது காவல் துறையினருக்குச் சந்தேகம் வலுத்துள்ளது.