சென்னை: ஆஸ்திரேலிய நாட்டு கல்வி கலை விளையாட்டுத்துறை அமைச்சர் டேவிட் டெம்பில்மேன், சென்னை தலைமை செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை இன்று (ஜூலை 19) சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனையின் நிறைவாக செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, 'ஆஸ்திரேலியாவிலிருந்து வந்த விளையாட்டு மற்றும் பன்னாட்டு கல்வி கலாசாரத்துறை அமைச்சர் டேவிட் டெம்பில்மேனுடன் முதலமைச்சரின் சார்பில் இன்று ஆலோசனை மேற்கொண்டேன்.
குறிப்பாக கல்வித்துறையின் இயக்குநர்கள், டோட் இயக்குநர்கள் இந்த ஆலோசனையில் பங்கேற்று ஆஸ்திரேலியப் பல்கலைக் கழகங்களுடன் நமது பல்கலை கழகங்களைத் தொடர்புபடுத்தும் நிகழ்சிகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் ஆஸ்திரேலிய மாணவர்கள் இங்கு வந்தாலும், நமது மாணவர்கள் அங்கு சென்று படித்தாலும் மேற்கொள்ளப்பட வேண்டிய வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
பெரியார் பல்கலை. விவகாரம் தொடர்பாக உயர் கல்வித்துறையைச் சார்ந்த 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, ஒருவாரத்திற்குள் அரசிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, தகுதியான கௌரவ விரிவுரையாளர்கள் டி.ஆர்.பி தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தபடுவர்’ என்றும் தெரிவித்தார்.
சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14ஆம் தேதி வரலாற்று முதுகலை பட்டப்படிப்பு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வில் "தமிழ்நாட்டிற்குரிய தாழ்ந்த சாதி எது" என வினா கேட்கப்பட்டு "மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன்" என்ற நான்கு சாதிகளின் பெயர்கள் விருப்பப் பதிலாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்குப் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புத்தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பெரியார் பல்கலை.தேர்வில் 'சாதி' குறித்து எழுப்பப்பட்ட சர்ச்சை கேள்வி - கோவையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!