கூட்டுறவு வங்கிகளில் 5 ஏக்கருக்கும் கீழ் நிலம் வைத்துள்ள விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தமிழ்நாடு அரசு தள்ளுபடி செய்துள்ளது. அதன்படி, 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய்க்கு கடன் தள்ளுபடிசெய்யப்பட்டு, அதன்மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசின் கடன் தள்ளுபடியால் குறைந்த அளவிலான விவசாயிகளே பலனடைவர் என விவசாய சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
இதுபற்றி பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் சண்முகம், "இத்தள்ளுபடியால் 16 லட்சம் விவசாயிகள்தான் பயனடைவர் என அரசே சொல்கிறது. மொத்தமுள்ள விவசாயிகளில் 25% பேர்தான் கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்றிருப்பர். மீதமுள்ளவர்கள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் வங்கிகளிலேயே கடன் பெற்றிருப்பதால், அவற்றையும் அரசு தள்ளுபடி செய்ய வேண்டும்" என்றார்.
’தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கடன்களையும் ரத்துசெய்ய வேண்டும்’ அரசின் வேளாண் கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது என்றாலும், அதில் மிகப்பெரிய அளவில் பாகுபாடு உள்ளது எனக் குற்றஞ்சாட்டுகிறார், காவிரி விவசாயிகள் சங்க கூட்டமைப்பின் பி.ஆர். பாண்டியன், "அரசு வெளியிட்டுள்ள தள்ளுபடி தகவலின்படி, காவிரி டெல்டா பகுதியில் 8 மாவட்டங்களுக்கு 2,035 கோடி ரூபாயும், சேலம், ஈரோடு ஆகிய இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் 2,400 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 40 விழுக்காடு நிலப்பரப்பை உள்ளடக்கிய, முக்கிய வேளாண் மண்டலத்திற்கு குறைவான நிதி ஒதுக்கிவிட்டு, முதலமைச்சர் சார்ந்த இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இது முழுக்க முழுக்க அரசியல் லாபத்திற்காக செய்யப்படுகிறது. இது தமிழ்நாடு விவசாயிகள் மத்தியில் தேவையற்றப் பிளவை ஏற்படுத்தும்" என்று கூறினார்.
’கூட்டுறவு பயிர்க்கடன் தள்ளுபடியால் அதிகம் அதிமுகவினரே பயனடைவர்’ விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தொடரப்பட்ட வழக்கில், தங்களிடம் நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய பழனிசாமி அரசு, ஆட்சிக்கு வந்தால் வேளாண் கடன்களை ரத்துசெய்வோம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறிய நிலையில், அவசர அவசரமாக தேர்தலை குறிவைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் பிரியன்.
திமுக கூறியதால் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? ”கடந்த ஐந்து ஆண்டுகளில் கூட்டுறவு வங்கிகளிலிருந்து அதிமுக பிரமுகர்களுக்கே அதிகளவு கடன் வழங்கப்பட்டுள்ளது. மற்ற விவசாயிகளும் பயன் பெற வேண்டுமென்றால் நகை கடன்களையும், நீண்டகால கடன்களையும் ரத்துசெய்ய வேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும் ஒவ்வொரு அரசியல் சார்பு இருக்கும். உதாரணமாக திருவாரூரில் உள்ள விவசாயி பயிர்க்கடன் தள்ளுபடிக்காக அதிமுகவுக்கு வாக்களிக்கப் போவதில்லை” என்றார் பிரியன்.
பயிர்க்கடன் தள்ளுபடி, காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது உள்ளிட்டவை பழனிசாமி அரசு எடுத்த முக்கிய முடிவுகள். அதேநேரத்தில், வேளாண் சட்டங்களை ஆதரிப்பது, எட்டு வழிச்சாலை திட்டத்தை கொண்டுவருவதையும், அதே விவசாயிகள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதனாலேயே தான் ஒரு விவசாயி என எடப்பாடி பழனிசாமி வேடம் போடுவதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.
வேளாண் சட்ட ஆதரவு, எட்டு வழிச்சாலை ஆதரவு அதிமுகவுக்கு பின்னடைவா? இச்சூழலில், அரசு அறிவித்துள்ள பயிர்கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகள் அதிமுகவிற்கு சாதகமாக அமையுமா? துயர் காலங்களில் அரசு செய்ய வேண்டியதை சாதனைகளாக சொல்வதை விவசாயிகள் ஏற்பார்களா? இக்கேள்விகளுக்குப் பதில் அளிப்பதற்காகவே ஏர் பிடித்த கைகளோடு, தமிழ்நாட்டின் பெரும் கூட்டமான விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: சசிகலாவுக்கு நோட்டீஸ் வழங்கிய கிருஷ்ணகிரி டிஎஸ்பி மீது நடவடிக்கை கோரி வழக்கு!