பெங்களூரு சிறையில் இருந்த சசிகலா வரும் 27ஆம் தேதி விடுதலை ஆவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்ட நிலையில், திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. பின், கரோனா தொற்று உறுதியாகி விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் குறித்த தேதியில் சசிகலா விடுதலை ஆவாரா என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்களிடையே எழுந்துள்ளது. சட்டவல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள் என்ற விவாதமும் கிளம்பியுள்ளது.
சசிகலாவின் உடல் நிலை பாதிப்பு, அவரது விடுதலைத் தேதியில் என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரும் என விவரிக்கும் அரசியல் வல்லுநர்கள், 'வரும் 27ஆம் தேதிக்குப் பிறகும், சசிகலா மருத்துவச் சிகிச்சையில் இருக்க நேர்ந்தால், சம்பந்தப்பட்ட மருத்துவமனை அமைந்திருக்கும் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளரிடம் சசிகலாவை சிறை நிர்வாகம் ஒப்படைத்துவிடும்.
பின்னர் இது குறித்த விவரங்கள் தமிழ்நாடு காவல் துறைக்கும் தெரிவிக்கப்படும். அதாவது, சசிகலா விடுதலை செய்யப்பட்டதற்கான ஆவணங்களைக் காவல் கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்துவிட்டு, கையெழுத்து பெற்றுக்கொள்வதோடு கூடவே, சசிகலா உறவுகளிடமும் சாட்சிக் கையெழுத்து பெற்றுக்கொள்வார்கள்' என்கின்றனர்.
மேலும் 'விடுதலைத் தேதிக்கு முன் ஒருவரின் உடல்நலம் நலிவுற்றால், அவரை உடனே விடுவிக்க உள்துறை அமைச்சகத்திற்கு சிறப்பு அனுமதி உண்டு. கர்நாடக சிறைத்துறை, இது குறித்த கருத்தை மத்திய உள்துறையிடம் கேட்டு முடிவு எடுக்கும்' எனவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் விடுதலைக்கான கடிதம் மருத்துவமனைக்கே நேரில் சென்று வழங்குவதற்கான நடைமுறைகள் தொடங்கி இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. நாளை மறுநாள்(ஜனவரி.27) கடிதம் கிடைத்த உடன், அடுத்த கட்ட நகர்வு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் தெரிகிறது.
பிப்ரவரி 2ஆம் தேதி, சசிகலா தமிழ்நாடு வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக கூறுகின்றனர். நேரடியாக தமிழ்நாடு வரும் அவர் சென்னை மெரினாவில் பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா நினைவிடத்திற்கு நேரில் சென்று மரியாதை செய்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து பேசிய சசிகலா தரப்பு வழங்கறிஞர் ராஜாசெந்தூர் பாண்டியன், 'குறித்த தேதியில் அவர் விடுதலை செய்யப்படுவார். தமிழ்நாடு வருவது உடல்நிலையைப் பொறுத்து தான் முடிவு செய்ய முடியும். சிறைத்துறை நடைமுறைகள் நாளை மறுநாள்(ஜனவரி 27) உடன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.