சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில்(Anna centenary library) டாக்டர் எஸ் ஆர் அரங்கநாதன் விருதுகளை 33 நூலகங்களுக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கலந்து கொண்டு வழங்கினார்.
மேலும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைய சமூகத்தினர் அரசுகளின் பல்வேறு போட்டித் தேர்வுகள் மற்றும் வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை அறிய உங்கள் நூலகம் உள்ளங்கையில் என்ற TN Employment News மற்றும் www.tnemployment.in என்ற இணையதளத்தையும் தொடங்கிவைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "பொது நூலகத் துறையின் சார்பில் இளைஞர்கள் மற்றும் படித்தவர்களுக்கு அரசின் வேலை வாய்ப்புகளை எளிதில் தெரிந்துகொள்ளும் வகையில் உங்கள் நூலகம் உள்ளங்கையில் என்ற செல்போன் செயலி தொடங்கப்பட்டுள்ளது.
ஓலைச்சுவடிகளுக்கு மின்னுருவாக்கம்
மேலும், தொன்மையான தமிழ் மற்றும் தமிழ் மொழியினை அறிந்து கொள்ளும் வகையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் உள்ள அரிய அச்சு நூல்கள் இதழ்கள் ஓலைச்சுவடிகள் உள்ளிட்ட ஆய்வாதார வளங்களை பொது நூலக இயக்ககம் மின்னுருவாக்கம் செய்துள்ளது.
இதுவரை 19 ஆயிரத்து 684 நூல்களும் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 694 ஓலைச்சுவடிகள் பக்கங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. அண்ணா நூற்றாண்டு நூலகத்தினை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் .
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் உறுப்பினர்களை சேர்ப்பது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிக்கல்வி துறையில் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன.
சுழற்சி முறை வகுப்பு
பொதுத்தேர்வு எழுதவுள்ள 10 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் தினமும் பள்ளிக்கு வர கூறப்பட்டுள்ளது. தற்போதை வழிகாட்டும் நெறிமுறைகளின் அடிப்படையில் சுழற்சி முறை வகுப்புகளை நிறுத்த முடியாது.