தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதிதாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் சென்னை நந்தனத்தில் உள்ள மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அலுவலகத்தில் துறை சார்ந்த ஆலோசனை கூட்டத்தில் மீன் வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "வரவிருக்கின்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த திட்டங்கள் எவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மீனவர் நலன் காக்கும் மற்றும் விவசாயிகள் கால்நடை சார்ந்த நலன் காக்கும் அரசாக இந்த அரசு அமையும். வரக்கூடிய பட்ஜெட் கூட்டத்தொடரில் அதற்கான திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்" எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர், "இலங்கை கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டு கொண்டிருந்தாலும் அண்மையில் நடைபெற்ற சம்பவம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்.
மேலும், புதிதாக பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு தலைவர் பொறுப்பை ஏற்றிருக்கும் அண்ணாமலை தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு, மீனவர் படுகொலை நிகழாது என்று கூறி சில நாட்களிலேயே இந்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.