பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகமான கமலாலயத்தில் நேற்று(ஜன.28) நகர்ப்புற தேர்தல் குறித்து மாவட்ட மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. இக்கூட்டத்தின் பின்பு முன்னாள் ஒன்றிய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், "காணொளி மூலமாக மாவட்ட, மாநில நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடைபெற்றது. ஓரிரு நாட்களில் நேர்காணல் முடிந்த பிறகு வேட்பாளர் தேர்வு செய்யப்படுவார்கள். இதனைத் தொடர்ந்து அதிமுகவுடன் உள்ளாட்சித் தேர்தல் கூட்டணி தொடருமா என்ற கேள்விக்கு, இது பற்றி எங்கள் மாநில தலைவர் அண்ணாமலை தான் முடிவு செய்வார்.
மேலும் கூட்டணி பேச்சுவார்த்தைக்கு அதிமுக அழைப்பு விடுத்ததா என்ற கேள்விக்கு, கூட்டணி குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை எங்கள் மாநில தலைவருக்கு வழங்கியிருக்கிறோம். இப்போது எங்கள் முழு கவனமும் வேட்பாளர் நேர்காணல் குறித்து தான் முடிவு எடுத்து வருகிறோம்.
மேலும் வேட்பாளர் நேர்காணல் பணி நாளை அல்லது நாளை மறுதினம் முடிவடையும். அதில் எந்த விதமான குழப்பங்களும் இல்லாமல் பார்த்துக்கொள்வதாக மாவட்ட தலைவர்களுடன் ஆலோசனை வழங்கி உள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.