தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஜெ.வின் சொத்து தீபா, தீபக்கிற்கு கிடைக்குமா?

சென்னை: ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு நேரடி வாரிசுகள் என தீபாவையும், தீபக்கையும் நீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில் ஜெயலலிதாவின் சொத்துகளின் மதிப்பு என்ன, இத்தீர்ப்பினை அதிமுக ஏற்குமா மறுக்குமா என்பது குறித்த ஒரு பார்வை...

admk
admk

By

Published : Jun 1, 2020, 7:38 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக்குறைவால் 2016ஆம் ஆண்டு மறைந்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு யார் வாரிசு என்ற கேள்வி எழுந்தது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்குத் தாங்களே வாரிசு என்றனர். ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்திற்குச் செல்லவும் அவர்கள் முயற்சித்தனர்.

இந்நிலையில், அதிமுக அரசு திடீரென ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்போவதாக அறிவித்தது. இதற்காக அண்மையில் அவசரச் சட்டம் ஒன்றையும் பிறப்பித்த ஆளும் தரப்பு, வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு ஏதுவாக நிலம் கையகப்படுத்தும் பணியிலும் இறங்கியது.

இதற்காக முதலமைச்சர் தலைமையில் அறக்கட்டளை உருவாக்கப்பட்டு, ஆளுநரும் அதற்கு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியானது.

ஜெயலலிதா, சசிகலா

இதற்கிடையே, ஜெயலலிதாவின் சொத்துகளைத் தனி அலுவலர் கொண்டு நிர்வகிக்க வேண்டும் எனக்கூறி, அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருந்தனர்.

இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு, ஜெயலலிதாவின் சொத்துகள் அனைத்திற்கும் அவரின் அண்ணன் மகள், மகனான தீபா, தீபக் ஆகியோரே நேரடி வாரிசுகள் என அதிரடியாக அறிவித்தது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் முடிவை மறுபரிசீலனை செய்யவும் அரசுக்கு அறிவுறுத்தியது.

வேதா நிலையம், போயஸ் தோட்டம்

இது குறித்து கருத்து தெரிவித்த தீபா, உயர் நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை தானே எதிர்பார்க்கவில்லை என்றும், அதிமுகவினர் இதைத் தலைவணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.

ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு, அவற்றில் எவை எவை தீபா, தீபக்கிற்குச் செல்லும் என்பது குறித்த பார்க்கலாம்.

2016ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், ராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் போட்டியிட்ட அப்போதைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தான் தாக்கல்செய்த மனுவில் தெரிவித்திருந்த சொத்து விவரங்கள் இவைதான்.

ஜெயலலிதா மறைவு

ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு

ஜெயலலிதாவின் மொத்த சொத்து மதிப்பு 118 கோடியே 58 லட்சம் ரூபாய் என்றும், அசையும் சொத்துகளான நகை, வாகனங்கள் போன்றவற்றின் மதிப்பு 41 கோடியே 63 லட்சத்து 55 ஆயிரத்து 395 ரூபாய் என்றும், நிலம், கட்டடம் போன்ற அசையா சொத்துகளின் மதிப்பு 72 கோடியே ஒன்பது லட்சத்து 83 ஆயிரத்து 190 ரூபாய் என்றும் கூறப்பட்டுள்ளது.

அசையா சொத்துகளில் ஜெயலலிதாவின் இல்லமான போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம், மந்தைவெளி, தேனாம்பேட்டை, ஹைதராபாத் ஆகிய இடங்களில் உள்ள வணிகக் கட்டடங்கள் உள்ளிட்டவை அடங்கும். இவைத்தவிர, காஞ்சிபுரம் மாவட்டத்திலும், ஹைதராபாத்திலும் மொத்தமாக 17.93 ஏக்கர் உள்ளது.

ஜெயலலிதா

வங்கியில் வைப்புவைத்துள்ள (டெபாசிட்) தொகை 10 கோடியே 47 லட்ச ரூபாய். இதில் இரண்டு கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கில் முடக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களில் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பில் முடக்கப்பட்ட தங்கம் 21,280.30 கிராம் ஆகும். வெள்ளிப் பொருள்கள் 1,250 கிலோ ஆகும். தனக்கு இரண்டு கோடியே நான்கு லட்சத்து இரண்டாயிரத்து 987 ரூபாய் கடன் உள்ளதாக ஜெயலலிதா குறிப்பிட்டிருக்கிறார். இதுமட்டுமல்லாமல் தனக்குச் சொந்தமாக ஒன்பது கார்கள் உள்ளதாகவும், அதில் ஒரு அம்பாசிடர் காரை முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக வைத்திருப்பதாகவும் மனு தாக்கலில் அவர் தெரிவித்திருக்கிறார்.

தீபா, தீபக்கிற்கு எந்தெந்த சொத்துகள்?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோரை அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதனால் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான சொத்துகள் அனைத்திற்கும் தீபா, தீபக் ஆகியோரே நேரடி வாரிசுகள் ஆகியுள்ளனர்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா

அதன்படி, ஜெயலலிதாவுக்குச் சொந்தமான போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு, அண்ணா சாலையில் உள்ள பார்சன் வணிக வளாகத்தில் அமைந்திருக்கும் சில கடைகள், செயின்ட் மேரிஸ் சாலையில் உள்ள ஒரு சொத்து, ஹைதராபாத் ஸ்ரீநகரில் உள்ள வீடு, திராட்சைத் தோட்டம் ஆகியவை அவ்விருவருக்கும் சொந்தமாகியுள்ளன.

மேலும், கொடநாடு எஸ்டேட், ராயல் வேளி ஏற்றுமதி நிறுவனம், ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் ஆகியவைகளில் 50 விழுக்காடு பங்குகளும், கிரீன் டீ எஸ்டேட்டில் 77 விழுக்காடு பங்குகளும் கிடைக்கப்பெறும்.

ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்

இவை தவிர, ஜெயலலிதாவின் பெயரில் உள்ள 42.25 லட்சம் மதிப்புள்ள சொகுசு கார்கள் உள்ளிட்ட வாகனங்களும், சுமார் 5.32 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள், சுமார் 4.36 கோடி மதிப்பிலான வெள்ளிப் பொருள்களும் சொத்துகளில் அடங்கும். சுமார் 3.42 கோடிக்கு பங்கு முதலீடுகள் ஜெயலலிதாவுக்கு உள்ளன. மேலும், வீட்டு உபயோகப் பொருள்கள், கைக்கடிகாரங்கள், இதரப் பொருள்களும் உள்ளன.

மேற்கூறப்பட்டவற்றின் மதிப்பு சுமார் 913 கோடி என்று 2016ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இந்தச் சொத்துகளின் மதிப்பு 1,000 கோடி ரூபாயைத் தாண்டும் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், தீபா கூறியதைப்போல உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு அதிமுக தலை வணங்குமா அல்லது இவ்விவகாரத்தில் மீண்டும் தலை எடுக்குமா என்பது போகப் போகவே தெரியும்.

இபிஎஸ் - ஓபிஎஸ்

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் நேரடி வாரிசு என்ற தீர்ப்பை நானே எதிர்பார்க்கவில்லை - ஜெ. தீபா

ABOUT THE AUTHOR

...view details