தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

2% கட்சி என்ற நிலையை மாற்றுமா பாஜக? - மோடி

சென்னை: நாட்டையே ஆளும் பாஜகவால் சொல்லும்படியான ஓர் இடத்தை தமிழகத்தில் இன்னும் பிடிக்க முடியவில்லை. ஆனாலும், அக்கட்சி தொடர்ந்து நம்பிக்கையோடு செயலாற்றி வருகிறது. இந்நிலையில், இரண்டு சதவீத கட்சி என்று பலராலும் சொல்லப்படும் நிலையை இம்முறை பாஜக மாற்றுமா என்பதை பற்றி ஆராய்கிறது இத்தொகுப்பு.

bjp
bjp

By

Published : Mar 17, 2021, 7:24 PM IST

வட மாநிலங்களில் அசுர பலத்துடன் வெற்றி பெற்று பரந்து விரிந்து ஆளுமை செலுத்தி வரும் பாஜக, தமிழகத்தில் மட்டும் மலரா மொட்டாகவே இருந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் இங்கு நடக்கும் தேர்தல்களில், அக்கட்சியால் 2 முதல் 3 சதவீத ஓட்டுகளை கடந்து மேல் எழ இயலவில்லை. இருப்பினும், வரும் தேர்தலில் அது மாறுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதனாலேயே, 1967க்கு பின் மாநில கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த தமிழகத்தில், தாமரையை மலர வைக்க கடுமையாக முயன்று வருகிறது பாஜக.

இந்நிலையில், தமிழகத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து, 20 சட்டப்பேரவை தொகுதிகளிலும், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியிலும் பாஜக போட்டியிடுகிறது. கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது, மக்களிடையே ஜெயலலிதா கேட்ட ’மோடியா? லேடியா?’ என்ற ஒற்றைக் கேள்விதான், அத்தேர்தலில் 38 இடங்களில் வெற்றி பெற்று, அதிமுகவை இந்தியாவின் மூன்றாவது கட்சியாக கொண்டு வந்தது.

ஆனால், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவை ஒதுக்கி அரசியல் செய்ய முடியாத ஜெயலலிதா இல்லாத அதிமுக, வேறு வழியின்றி பாஜகவுடன் சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. இத்தேர்தலில் சட்டபேரவையில் குறிப்பிட்ட எண்ணிக்கை உறுப்பினர்களுடன் இடம்பெற வேண்டுமென்ற திட்டத்துடனும், குறைந்தது 5% ஓட்டுகளை பெறவும் திட்டம் வகுத்து தீவிரப் பணியாற்றி வருகிறது பாஜக.

’இத்தேர்தலில் 5% ஓட்டுகளைப் பெற பாஜக திட்டம்’

2001 சட்டமன்ற தேர்தலில் முதன்முறையாக திமுக தயவுடன் சட்டப்பேரவைக்குள் நான்கு உறுப்பினர்களுடன் நுழைந்த பாஜக, அப்போது 3.2% ஓட்டுகளை பெற்றது. அடுத்து வந்த 2016 தேர்தலில் தனித்து போட்டியிட்டு 2.86% ஓட்டுகளையும், 2011ல் 2.2% ஓட்டுகளையும் பெற்றது. 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் பாஜகவின் பொன்.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அதே வேளை 2019 தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து ஒரு இடத்தில் கூட பாஜகவால் வெல்ல முடியவில்லை.

இந்நிலையில், 2019ம் ஆண்டிற்கு பின் தமிழகத்தில் தனது அணுகுமுறையையும், செயல் திட்டத்தையும் மாற்றி பாஜக செயல்பட்டு வருகிறது. செல்லும் இடமெல்லாம் பிரதமர் மோடி, திருக்குறளையும், தமிழ் மொழியின் சிறப்புகளையும் பேசுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சீன அதிபர் தமிழகம் வந்தபோது, வேட்டி அணிந்து வரவேற்றது, பட்ஜெட் உரையின் போது ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டியது என, தமிழர்களை கவர அனைத்து அஸ்திரங்களையும் எடுத்து பார்க்கிறது பாஜக.

செல்லுமிடமெல்லாம் தமிழின் பெருமை பேசும் மோடி

அதேபோல், மனதின் குரல் வானொலி உரையில், மிகவும் தொன்மையான தமிழ் மொழியை கற்றுக் கொள்ள முடியாதது வருத்தமளிப்பதாகவும் மோடி தெரிவித்திருந்தார். மாநிலம் முழுவதும் வேல் யாத்திரை, கந்த சஷ்டி கவசம் பாடுதல் என இந்து மதம் என்பதிலிருந்து சற்று தள்ளி, தமிழ் இறை பெருமைகளை உயர்த்தி பிடிப்பதன் மூலம், மக்களின் மனங்களை தனவசப்படுத்தலாம் எனவும் நம்புகிறது பாஜக.

மேலும், பாஜக மாநிலத் தலைவராக பட்டியலினத்தை சேர்ந்த முருகனை தலைவராக்கியதால், சமூகரீதியிலான ஓட்டுகளை கவரும் முயற்சியாக அது பார்க்கப்பட்டது. அதோடு, 7 உட்பிரிவுகளை உள்ளடக்கி தேவேந்திர குல வேளாளர் எனப் பெயரை மாற்றியதும் அதன் ஒருப்பகுதியாகவே கூறப்படுகிறது.

’தமிழ் இறையை உயர்த்தி பிடிக்கும் பாஜக’

இதனிடையே, சாதி வாக்குகளை நம்பி களமிறங்குவது பாஜகவிற்கு கை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற மூத்தப் பத்திரிகையாளர் ப்ரியன், பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வால் மக்களின் மனநிலை பாஜகவிற்கு எதிராகவே உள்ளதாகவும் தெரிவித்தார். ஆனால், நிச்சயமாக இத்தேர்தலில் தங்களுடைய வாக்கு வங்கி உயரும் என்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன், தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் கட்சி வளர்ந்திருப்பதாகவும் தெரிவித்தார்.

மற்ற மாநிலங்களில் கூட்டணி வைத்தே இதுவரை வளர்ந்துள்ள பாஜக, 20 தொகுதிகளில் மட்டுமே நிற்பதால் எந்த அளவிற்கு ஓட்டு வங்கி உயரும் என்பது போகப் போகத்தான் தெரியும் என்கிறார் அரசியல் விமர்சகர் சீனிவாசன். மேலும், தேர்தல் வேலைகளில் முன்பிருந்ததை விட சிறப்பாக செயல்பட்டு வரும் பாஜகவின் எதிர்காலம், தேர்தலுக்கு பின்னான வாக்கு வங்கி உயர்வதை பொறுத்துதான் கூற முடியும் என்கிறார் அவர்.

’கூட்டணி கட்சிகளால் வளரும் பாஜக’

இருப்பினும், தனது சித்தாந்தத்தில் முழு கவனம் செலுத்துவதும், மக்கள் விரும்பாத திட்டங்களை புகுத்துவதும், ஒவ்வொரு முறை மோடி தமிழகம் வரும் போதும் ஆகும், #GoBackModi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங், பாஜகவிற்கான பதிலாகவுள்ளது. இவை அனைத்தையும் தாண்டி, மாற்று கட்சியினர், திரை நட்சத்திரங்களை சேர்ப்பது, சாதி கட்சிகளின் ஆதரவை பெறுவது என பல்வேறு யுக்திகளுடன் தேர்தல் களம் காணும் பாஜகவின் எதிர்காலம் மற்றூம் இரண்டு சதவீத கட்சி என்ற நிலையை மே 2 முடிவுகள் சொல்லி விடும்.

இதையும் படிங்க: ஒரு கேள்வி கேளுங்கள் அதிமுகவினர் ஓடிவிடுவார்கள்: உதயநிதி ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details