சென்னை:தேனீக்களின் பாதுகாப்பு, வளர்ப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் தேனீக்களின் அவசியம் பற்றியும், மனித குலத்திற்கு தேனீக்கள் செய்யும் சேவை பற்றியும் தெரிந்து கொள்வது அவசியம். எனினும் தமிழ்நாட்டில் குறிப்பாக வனப்பகுதிகளில் தேனை சட்டத்திற்கு புறம்பாக எடுப்பதாலும் வனங்கள் மற்றும் மரங்களை அழிப்பதாலும் தேனீக்களின் எண்ணிக்கை குறைந்து, அழியும் விளிம்பில் இருப்பதாக வன விலங்கு ஆர்வலர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது.
மனிதர்கள், தாவரங்களின் மத்தியில் தேனீக்கள்:
தேனீக்கள் மகரந்தச் சேர்க்கை செய்வதன் மூலம் உலகின் மிக முக்கியமான உணவுப் பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கின்றன. மனித பயன்பாட்டிற்காக பழங்கள் அல்லது விதைகளை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு பயிர்களிலும் மகரந்தச் சேர்க்கைகள் அவசியம்.
எனவே தேனீக்கள் இல்லையெனில் மனிதர்கள் உயிர்வாழ முடியாது என்பது அறிவியல் நமக்கு விளக்குகிறது. மேலும் தேனீக்கள் சுற்றுச்சூழலுக்கு மட்டுமன்றி மனித வாழ்க்கைக்கும் பேருதவியாக இருக்கிறது. தேனீக்களின் வாழ்க்கை அழியும் என்றால் மனிதர்களுக்கும் அழிவு நிச்சயம் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் தேனீக்கள்:
தமிழ்நாட்டை பொறுத்தவரை மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் தேனீக்களை அதிக அளவில் பார்க்க முடியும். குறிப்பாக சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பகுதியில் உள்ள கீர்மாளம், நீலகிரியில் உள்ள கீழ் கோத்தகிரி, சிறியூர் மற்றும் பச்சைமலை, ஓசூர் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் தேனீக்கள் அதிக அளவில் உள்ளன.
மேலும் தமிழ்நாட்டில் யானை - மனிதர் இடையேயான தாக்குலை குறைக்கும் (RE-HAB (Reducing Elephant – Human Attacks using Bees) என்ற இந்த புதிய திட்டம் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தேசிய தேன் திட்டத்தின் துணை திட்டமாகும். இத்திட்டத்தில், மனிதர்களை யானைகள் தாக்கும் சம்பவங்களை தடுக்க, தேனீ கூண்டுகள் வேலிகளாக பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இது குறித்து கொ.அசோக சக்கரவர்த்தி, வன விலங்கு ஆராய்ச்சியாளர், கூறுகையில், "75 முதல் 90 விழுக்காடு பூக்கும் தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக தேனீக்களை நம்பியுள்ளது. குறிப்பாக அனைத்து காய்கறி மற்றும் பழங்களை உற்பத்தி செய்யும் தாவரங்கள் இந்த மகரந்த சேர்க்கையாளர்களை நம்பித்தான் இருக்கின்றன. இந்த சிறு உயிரினமான தேனீக்கள் அழிந்தால் 71 மில்லியன் மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக பாதிக்கப்படுவார்கள். அது மட்டுமல்லாமல் வைட்டமின் எ (Vitamin A) குறைபாடு உடையவர்களாக இருப்பார்கள் சில தரவுகள் தெரிவிக்கின்றன"என விளக்கினார்.
மேலும் 173 மில்லியன் மக்கள் ஃபோலிக் அமிலம் (folic acid) குறைபாடு உடையவர்களாக மாறப்படுவார்கள். ஏனெனில் இந்த ஃபோலிக் அமிலம் என்பது ரத்த சோகை மற்றும் கர்ப்பினி பெண்களுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கும். உலகம் முழுவதும் இந்த மகரந்த சேர்க்கையாளர்களால்(தேனீக்களால்) 2,35,000 மில்லியன் டாலர் வருமானம் ஒவ்வொரு ஆண்டும் ஈட்டப்படுகிறது என்கிறது, ஒரு ஆய்வு என தெரிவித்த அசோக சக்கரவர்த்தி மற்றுமொரு ஆய்வில் இந்தியாவில் 160 மில்லியன் ஹெக்டேர் பயிரிடப்பட்ட நிலங்களில் 55 மில்லியன் ஹெக்டேர் நிலங்களில் உள்ள பயிர்கள் மற்றும் தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக தேனீக்களை நம்பித்தான் உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், தேனீக்களின் அழிவுக்கு பூச்சிக்கொல்லிகளே மிக முக்கியமான ஒரு காரணி. தேனீக்களின் வாழ்க்கை அழிகிறது என்றால் அது மனிதர்களுக்கான அழிவும் ஒன்றே என்று ஆராய்ச்சியாளர் எச்சரித்தார்.