புதுவண்ணாரப்பேட்டை காவல்நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணியாற்றி வந்தவர் நரேஷ். அவரது மனைவி ஜெயஸ்ரீ. அவர்களுக்கு தருண் (வயது 7) என்ற மகன் உள்ளார். நரேசும், ஜெயஸ்ரீயும் பெரம்பூர் செம்பியத்தில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர். மகன் தருணை புழல் புத்தகரத்தில் உள்ள ஜெயஸ்ரீயின் தாய் ஜமுனா வீட்டில், தங்க வைத்து அங்குள்ள பள்ளியில் சேர்த்திருந்தனர். மகனைப் பார்க்க அடிக்கடி புத்தகரத்துக்குச் சென்று வந்தனர்.
நரேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அதை ஜெயஸ்ரீ கண்டித்தும் வந்தார். இக்குடிப்பழக்கத்தினால் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று காலை அவர்களிடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஜெயஸ்ரீ கோபித்துக் கொண்டு புத்தகரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றிருக்கிறார். பின்னர் ஜெயஸ்ரீ தனது தாய் ஜமுனா, மகன் தருண் ஆகியோருடன் வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள தாய்மாமன் சரவணன் வீட்டுக்குச் சென்றுள்ளார். மனைவி, மகனுடன், சரவணன் வீட்டுக்குச் சென்று இருப்பதை அறிந்த நரேஷ் அங்கு சென்று இனிமேல் தகராறு செய்ய மாட்டேன் என்று மனைவியிடம் சமாதானம் செய்தார். பின்னர் ஜெயஸ்ரீ, தருண் ஆகியோரை புத்தகரத்தில் உள்ள மாமியார் வீட்டுக்கு நரேஷ் அழைத்துச் சென்றிருக்கிறார். அப்போது இரவு அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நரேஷ் கத்தியால் ஜெயஸ்ரீயை சரமாரியாக குத்தினார். இதனால், ஜெயஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.