தமிழ்நாட்டின் உச்ச பட்ச அலுவலராக தலைமை செயலர் உள்ளார். அவருக்கு அடுத்த படியாக 'பவர்புல்' அதிகாரம் கொண்டவராக இருப்பவர் உள்துறை செயலர் ஆவார். இவருக்குக் கீழ்தான் உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உள்ளிட்டவை உள்ளன. உள்துறையின் அமைச்சராக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். காவல் துறை உள்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், டிஜிபி நியமனம், காவல் துறை சீர்திருத்தம் ஆகியவை இவரது கட்டுப்பாட்டில் இருக்கும்.
இதனால்தான் தலைமை செயலருக்கு அடுத்தபடியாக இந்தத் துறை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. தற்போது உள்துறை கூடுதல் தலைமை செயலராக இருக்கும் நிரஞ்சன் மார்டி இந்த மாதத்துடன் ஓய்வு பெறவுள்ளார். 1986ஆம் ஆண்டு ஐஏஎஸ் அலுவலரான நிரஞ்சன் மார்டி, 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஓய்வு பெறவுள்ள நிலையில், அடுத்த உள்துறை செயலர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.