சென்னை: மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா 2016ஆம் ஆண்டிற்கான 50 அம்ச தேர்தல் அறிக்கைகளை ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் வெளியிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்ற சில மாதங்களிலேயே மறைந்த நிலையில், கட்சியில் ஏற்பட்ட உள்கட்சிப் பூசலையடுத்து நிதியமைச்சராக இருந்த ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பின்னர் மூன்று மாதங்களில் கட்சியில் ஏற்பட்ட குழப்பங்களை அடுத்து, அப்போதைய அஇஅதிமுக பொதுச்செயலாளராக இருந்த சசிகலாவின் ஆதரவோடு எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சரானார்.
அந்தச் சமயத்தில் வெளியிடப்பட்ட 50 அம்ச தேர்தல் அறிக்கைகளில் முக்கியமாகப் பேசப்பட்டது, உழவர்களுக்கான வேளாண் திட்டங்கள், பயிர்க்கடன் தள்ளுபடி, படிப்படியான மதுவிலக்கு, மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு, கல்வி, ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி, நீர்நிலை ஆதாரம், போக்குவரத்து, மக்கள் நலவாழ்வுத் துறைக்கான திட்டங்கள், நீட் தேர்வு ஆகும்.
கடன்கள் தள்ளுபடி, குடிமராமத்துப் பணிகள்
வேளாண்மை மேம்பாடு மற்றும் வேளாண்மை நலனைப் பொறுத்தவரை, தேர்தல் அறிக்கையில் "கூட்டுறவு வங்கிகளுக்கு சிறு, குறு விவசாயிகள் செலுத்த வேண்டிய பயிர்க்கடன், நடுத்தர காலக் கடன், நீண்டகாலக் கடன் ஆகிய அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இவை ஆளும் இபிஎஸ்-தலைமையிலான அரசால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
வேளாண் உற்பத்தியை அதிகரிக்கவும் உழவர்களின் நலன்களைப் பாதுகாக்கவும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று அதிமுக வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்த அறிக்கையைப் பொறுத்தவரை, 'குடிமராமத்து' என்னும் தொன்மையான திட்டத்தை அறிமுகப்படுத்தி, அதன் மூலம் உழவர்கள் பாசன வசதிகள் பெற, நிறைய ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டன, இதனால் வேளாண்மைக்குத் தண்ணீர் வசதி எளிதில் கிடைத்தது, என்று மாநில பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் என். வீரசேகரன் கூறினார்.
இழப்பைச் சந்தித்துவரும் உழவர்கள்
ஆனால், மறுபக்கம் பார்த்தால், தேர்தல் அறிக்கையில், 'சர்க்கரை ஆலைகளால் கரும்பு உழவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், கொப்பரை விலை குறையும் போதெல்லாம் உழவர்களிடமிருந்து கொப்பரையை வாங்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இது உழவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்று கூறிய வீரசேகரன், இந்த அறிவிப்பு இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றார். மேலும், கரும்பு, பருத்தி, தென்னை உழவர்கள் தொடர்ந்து இழப்பைச் சந்திப்பதாகக் கூறினார்.
மற்றொரு வாக்குறுதியான அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கைப்பேசி (Cellphone) விலையின்றி வழங்கப்படும், என்று அதிமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டது என்றே சொல்லலாம்.
பரந்து விரிந்து கிடக்கும் டாஸ்மாக்
தேர்தல் அறிக்கையில், "மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்பட்டு பூரண மதுவிலக்கு என்ற நிலை எய்தப்படும். முதலில் சில்லறை மதுபான கடைகள் திறந்திருக்கும் நேரம் குறைக்கப்படும். கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்படும். பின்னர் சில்லறை மதுபான கடைகளுடன் இணைந்த பார்கள் மூடப்படும். குடிப்பழக்கத்திற்கு உள்ளாகி உள்ளோரை மீட்பதற்கான மீட்பு நிலையங்கள் ஏற்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதைப் பொறுத்தவரை, ஜெயலலிதா 2016 மே 23 அன்று முதலமைச்சராக பதவியில் அமர்ந்தவுடன், மொத்தம் உள்ள கடைகளில், 500 மதுபான கடைகள் குறைக்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார்.
பிறகு அவரது மறைவிற்குப் பின், இபிஎஸ், 2017 பிப்ரவரி 24 அன்று ஜெயலலிதா பிறந்தநாளில், மேலும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அரசாணை பிறப்பித்தார். எனினும், அடுத்தடுத்த வருடங்களில் இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்று சொல்லலாம். டாஸ்மாக் கடைகள் எல்லா மூலை முடுக்குகளில் இயங்கிவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
முல்லைப் பெரியாறு பிரச்சினை
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட எடுக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும். மேலும், தமிழ்நாட்டிற்கு கிடைத்திடும் நீரை குறைக்கும் வகையில் கேரள அரசால் அணைகள் கட்டப்படுவது தடுக்கப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எனினும் இந்தக் கோரிக்கை ஜெயலலிதா பதவியில் இருக்கும்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 138 அடியிலிருந்து 142 வரை உயர்த்தினார். ஆனால், தேர்தல் அறிக்கையில் அணையின் நீர்மட்டம் 152 அடி வரை குறிப்பிட்டிருந்த நிலையில், இது வாக்குறுதி நிறைவேறவில்லை என்கின்றனர் பொதுப்பணித் துறை அலுவலர்கள்.
காவேரி ஆற்றின் குறுக்கே கர்நாடகம் எந்த அணையையும் கட்ட எடுக்கும் முயற்சிகள் தடுத்து நிறுத்தப்படும் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுள்ளது. எனினும், கர்நாடகா அணை கட்டும் முயற்சியை தொடர்ந்து எடுத்துவருகிறது. தமிழ்நாடு அரசுதான் இதைக் கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டும் எனப் பொதுப்பணித் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இது பற்றி, அதிமுவின் செய்தித் தொடர்பாளர் சிவசங்கரி தொலைபேசி மூலம் நம்மிடம் கூறுகையில், "2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள 50 அம்சங்களில், ஆளும் அதிமுக அரசு 80 லிருந்து 90 விழுக்காடு நிறைவேற்றிவிட்டது. மேலும், விடுபட்ட கோரிக்கைகள் அடுத்த அமையவிருக்கும் அதிமுக அரசால் நிறைவேற்றப்படும்" என்று கூறிய இவர், தேர்தல் அறிக்கையில் இடம் பெறாத கோரிக்கைகளைக்கூட இந்த அரசு நிறைவேற்றியிருக்குகிறது எனப் பெருமிதம் அடைந்தார்.