தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு! - சென்னை உயர் நீதிமன்றம்

தமிழ்நாடு முழுவதும் கோயில் சிலைகளை பாதுகாக்க "ஸ்ட்ராங்க் ரூம்" கட்டப்பட்டது குறித்து மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்ற செய்திகள், court news, protect temples idols, சென்னை உயர் நீதிமன்றம், கோயில் சிலைகள்
கோயில் சிலைகள்

By

Published : Oct 25, 2021, 7:19 PM IST

சென்னை:தமிழ்நாடு முழுவதும் உள்ள தொன்மையான கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக, 2015ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆர்.மகாதேவன் மற்றும் பி.டி.ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தொன்மையான, புராதன கோயில்களை பாதுகாக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களின் பட்டியலை தயாரித்து, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும். நிலங்களை வாடகைக்கு எடுத்தவர்களிடம் இருந்து பெற வேண்டிய வாடகை பாக்கியை வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

கோயில்களில் உள்ள சிலைகள், நகைகள் உள்ளிட்டவற்றை பட்டியலாக தயாரிக்க வேண்டும். கோயில்களில் 'ஸ்ட்ராங்க் ரூம்' அமைத்து, இந்த சிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஓதுவார்கள், அர்ச்சகர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவும், சீரமைப்புப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாநில, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

சிலைகள், நகைகளை புகைப்படம் எடுத்து அவற்றை இணைய தளங்களில் வெளியிட வேண்டுமென உத்தரவிட்ட நீதிபதிகள், ஆக்கிரமிப்பில் உள்ள நிலங்களை மீட்பதுடன், கோயிலுக்குச் சொந்தமான நிலங்களுக்கான வாடகையை நிர்ணயிக்க வேண்டும் எனவும் அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அறங்காவலர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும், பரம்பரை அறங்காவலர்களை அடையாளம் காண வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

கோயில்கள் பாதுகாப்பு தொடர்பான விதிகளை உடனடியாக வகுத்து வெளியிட வேண்டும். கோயில் நிலங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு "தனி தீர்ப்பாயம்" அமைக்க வேண்டும் என்பன உள்பட 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தனர்.

இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் ஆஜராகி, 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும், 32 உத்தரவுகள் குறித்து விளக்கம் கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதால், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து அறிக்கை அளிக்க அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரினார். இதேபோல தொல்லியல் துறை சார்பிலும் அறிக்கை அளிக்க அவகாசம் கோரப்பட்டது.

நீதிமன்றத்துக்கு உதவியாக ஆஜரான ரங்கராஜன் நரசிம்மன், உயர் நீதிமன்ற உத்தரவுகளை மீறி திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாகவும், உத்தரவின்படி மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்காமல் சீரமைப்பு பணிகள் துவங்கியுள்ளதாகவும், அறங்காவலர்கள் நியமிக்கப்படவில்லை எனவும், சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம் கட்டப்படவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.

இதையடுத்து, ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டதா? என அறிக்கை அளிக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், உத்தரவுகளை அமல்படுத்தியது குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

இதையும் படிங்க:இந்து முன்னணி எதிர்ப்பை மீறி 'பெரியாரும் இஸ்லாமும்' நிகழ்ச்சி நடத்த மனோன்மணியம் பல்கலை., முடிவு

ABOUT THE AUTHOR

...view details