2019 ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து தமிழ்நாட்டில் நெகிழிப் பயன்பாட்டிற்குத் தடைவிதித்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்தது. இதில் பால், மருந்துப் பொருள்களுக்கான நெகிழிக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அரசாணையில் நெகிழித் தடை குறித்து தெளிவாகக் குறிப்பிடவில்லை எனக் கூறி, சென்னை, சேலத்தைச் சேர்ந்த நெகிழித் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தன.
இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், பால், எண்ணெய், பிஸ்கட், சாக்லேட், வெளிநாட்டு நொறுக்குத் தீனிகளுக்கான நெகிழிப் பைகள் என அனைத்திற்கும் தடைவிதிக்க வேண்டும், விலக்களிக்கக் கூடாது என உத்தரவிட்டிருந்தார்.
நெகிழித் தடை முழுமையாக எப்போது அமல்படுத்தப்படும்? இந்நிலையில், இந்த வழக்கு வைத்தியநாதன், பி.டி. ஆஷா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, தடைசெய்யப்பட்ட நெகிழிப் பைகள் கோயிலுக்கு வெளியே பூக்கடைகளிலும், தெருவோரக் கடைகளிலும் பயன்படுத்தப்படுவதைக் காண முடிவதாகத் தெரிவித்தனர்.
எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படும் நெகிழித் தடை முழுமையாக எப்போது அமல்படுத்தப்படும்? ஒரு முறை பயன்படுத்தும் நெகிழி மட்டுமல்லாமல், நெகிழியை பயன்படுத்த முழுமையாக விதிக்கப்பட்ட தடையை அமல்படுத்த அரசு இதுவரை எடுத்த நடவடிக்கைகள் என்ன? எனக் கேள்வி எழுப்பினர்.
அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இது குறித்து பிப்ரவரி 11ஆம் தேதி அறிக்கைத் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கைத் தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: நெகிழிப் பயன்பாட்டை குறைக்க இல்லத்தரசியின் முயற்சி!