சென்னை:காவல் துறையில் உள்ள காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக அனைத்து மாநில உயர் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து எடுத்த வழக்கு, பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசுத் தரப்பில், உச்ச நீதிமன்றம் உத்தரவுப்படி, 2019ஆம் ஆண்டு வரையிலான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுவிட்டதாகவும், 2020ஆம் ஆண்டைப் பொறுத்தவரை 11 ஆயிரத்து 181 பதவிகளுக்கான தேர்வுகள் முடிக்கப்பட்டுவிட்டதாகவும், காவல் துறை ஆய்வு, மருத்துவப் பரிசோதனை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறி அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டது.
காவல் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மாநிலப் பாதுகாப்பு கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.