ஐஐடி மாணவர் சேர்க்கை மற்றும் ஆசிரியர் நியமனங்களில், இடஒதுக்கீடு முறையாக அமலாவது பற்றி ஆராய அமைக்கப்பட்டுள்ள குழு, அதன் நோக்கங்களுக்கு எதிரான பரிந்துரைகளை செய்திருப்பதால் அவ்வறிக்கையை முற்றிலுமாக நிராகரிக்குமாறு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதற்கு அக்குழுவின் அறிக்கை பரிசீலனையில் இருப்பதாக அமைச்சர் பதில் அனுப்பியுள்ளார். ஆனால் இட ஒதுக்கீடு தொடர்பான அக்குழுவின் அறிக்கையை, கால தாமதமின்றி நிராகரிக்குமாறு சு.வெங்கடேசன் மீண்டும் வலியுறுத்தி இருக்கிறார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சருக்கு அவர் மீண்டும் எழுதியுள்ள கடிதத்தில், "அக்குழு ஐஐடி ஆசிரியர் நியமனங்களை இட ஒதுக்கீடு வரம்பில் இருந்தே நீக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளது. இட ஒதுக்கீட்டின் வரம்பிற்குள் உதவிப் பேராசிரியர் மட்டும் இருந்தால் போதும்; மற்ற பதவிகளை இட ஒதுக்கீட்டு வரம்பில் இருந்து 'விடுவிக்கலாம்' என்றும் அது பரிந்துரைத்துள்ளது. இந்த இரண்டு முன்மொழிவுகளுமே மத்தியக் கல்வி நிலையங்கள் சட்டம் 2019 ஐ முறையாக அமலாக்குவது பற்றி பேசவில்லை.