தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

மருத்துவப் படிப்பில் 69% இட ஒதுக்கீடு நடைமுறை: அரசின் நிலைப்பாட்டைத் தெரிவிக்க உத்தரவு - etvtamil

மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை 2021-22ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்துவது குறித்த நிலைப்பாட்டைத் தெரிவிக்கும்படி மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தது.

மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்
மத்திய அரசுக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Jul 19, 2021, 3:06 PM IST

சென்னை:மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்கக்கோரி திமுக உள்ளிட்ட கட்சிகளின் சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக குழு அமைத்து ஆய்வுசெய்து, 2021-22ஆம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.

அதனடிப்படையில் அமைக்கப்பட்ட குழு, தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள 69 விழுக்காடு இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனப் பரிந்துரை அளித்தும், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கைக் காரணம் காட்டி சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை எனக்கூறி திமுக தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் முன்னிலையான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதத்தின்போது குறிப்பிட்டவை:

  • உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும், உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
  • 2021-22ஆம் கல்வியாண்டில் இடஒதுக்கீடு உத்தரவு அமல்படுத்தப்படும் என மத்திய அரசு உறுதியளித்தும் அதை நடைமுறைப்படுத்தவில்லை. இது நீதிமன்ற அவமதிப்புச் செயல்.

பின்னர் மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான அரசு கூடுதல் துணைத் தலைமை வழக்கறிஞர் (அடிசனல் சொலிசிட்டர் ஜெனரல்) சங்கரநாராயணன், மத்திய அரசு வழக்கறிஞர் சந்திரசேகரன் ஆகியோர் தாக்கல் செய்த மனுவில், 50 விழுக்காடு இடஒதுக்கீடு கேட்டுவிட்டு தற்போது 69 விழுக்காடு இடஒதுக்கீடு கோருவதாகவும், இடஒதுக்கீடு வழங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

மேலும், எந்த நீதிமன்ற அவமதிப்பும் செய்யவில்லை எனவும், இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும் மத்திய அரசுத் தரப்பில் வாதிடப்பட்டது.

இதையடுத்து உயர் நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதிகள், "தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டை 2021-22ஆம் கல்வியாண்டில் அமல்படுத்துவது குறித்த நிலைப்பாட்டை மத்திய அரசு அடுத்த வாரம் தெரிவிக்க வேண்டும்" என உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 26ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: 'ஜூலை 26 முதல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் பொன்முடி'

ABOUT THE AUTHOR

...view details