சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சென்னை மாநகராட்சியில் 2,670 பேர் போட்டியிட உள்ளனர். இதனிடையே சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான அறிவுறுத்தல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர் இன்று(பிப்.9) வெளியிட்டார்.
அதில் பின்வருவன குறிப்பிடப்பட்டுள்ளன
- வாக்குப்பதிவிற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக பரப்புரை முடிக்கப்பட வேண்டும்.
- வாக்குப்பதிவு நாள் மற்றும் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் பொதுக்கூட்டங்களோ அல்லது ஊர்வலமோ நடத்தக் கூடாது.
- வாக்குச் சாவடியிலிருந்து 200 மீட்டர் தொலைவில் எந்த வேட்பாளரும் முகாம் அமைக்க கூடாது.
- தேர்தல் நடத்தும் அலுவலரின் செல்லுபடியாகும் அனுமதி சீட்டு இல்லாமல் வாக்குச் சாவடிக்குள் நுழைய கூடாது.
- வாக்காளர்களுக்கு வழங்கப்படும் அடையாள சீட்டுகள், வெற்றுத்தாளில் இருக்கவேண்டும். அவற்றில் வேட்பாளரின் சின்னம் அல்லது பெயர் இருக்கக் கூடாது.
- வேட்பாளர் வாக்கு பதிவினை நேரடியாக பார்வையிடலாம்.
- உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குப்பதிவு நாளன்று வார்டுக்குள் செல்ல ஒரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும்.
- வேட்பாளர்களின் முகவர்களுக்கோ அல்லது கட்சி தலைவர்களுக்கோ தனி வாகனம் அனுமதிக்கப்படாது.
- வேட்பாளர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடமிருந்து அடையாள அட்டை பெற்றுக்கொள்ளலாம்.
- ஒரு வேட்பாளர் அவருக்கான தேர்தல் முகவரை படிவம் 10இன் மூலம் விண்ணப்பித்து நியமித்துக்கொள்ளலாம்.
- ஒரு வேட்பாளர் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கான வாக்குச்சாவடி முகவரை படிவம் 11இன் மூலம் விண்ணப்பித்து நியமிக்கலாம்.