கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடந்து வரும் நேரத்தில், திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு மற்றும் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர், அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கே.என்.நேரு, "வரும் 7 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் மாநாட்டில், அடுத்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் எப்படி முன்னேற்றத்தை கொண்டு வருவது என்பது குறித்து மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை சுமூகமாக தான் நடந்தது. அவர்கள் எங்களிடம் எந்த அதிருப்தியும் வெளிப்படுத்தவில்லை. கூட்டணி கட்சிகள் நிறைய உள்ளதால் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்ய தாமதம் ஏற்படுகிறது. இரண்டு நாட்களில் அனைத்து கூட்டணி கட்சிகளுடனும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நிறைவுபெறும்.