சென்னை: சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவருமான நல்லகண்ணுவின் பிறந்தநாள் விழா, சென்னையிலுள்ள அக்கட்சியின் தலைமையகமான பாலன் இல்லத்தில் இன்று(டிச.26) நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அரசியல் சாசனத்திற்கு ஆபத்து
இந்த நிகழ்ச்சியில் பேசிய நல்லகண்ணு, "இந்திய அரசியல் சாசனம் சாதி மதம் பார்க்காமல் அமைக்கப்பட்டது. இன்றைக்கு அந்த அரசியல் சாசன சட்டத்திற்கு ஆபத்து வந்துள்ளது. மத்திய அரசு நிறைவேற்றி உள்ள வேளாண் சட்டம் அரசியல் சாசனத்திற்கு விரோதமானது.
எப்படி சுதந்திரம் பெற போராடினோமோ, அதே போல், தற்போது அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற போராட வேண்டியுள்ளது. நாடாளுமன்றத்தையும், அரசியல் சாசன சட்டத்தை காப்பாற்ற வேண்டிய பொறுப்பு நாம் அனைவருக்கும் உள்ளது. போராடி சுதந்திரம் பெற்றது போல, அரசியல் சாசனத்தையும் போராடி பாதுக்காக்க வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது" என்றார்.