தமிழ்நாட்டில் நடைபெறும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் விருப்பமுள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் மக்கள் இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பனையூரில் உள்ள அலுவலகத்தில் 20 நிர்வாகிகளை சந்தித்துப் பேசினார்.
அதில் தற்போது தேர்தல் நடைபெற உள்ள 9 புதிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் இன்னும் சில மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகள் என 20 மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றுள்ளனர்.
அப்போது ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியின் கருத்துக்கள் கேட்கப்பட்டுள்ளன. மேலும் விரைவில் நடைபெற இருக்கும் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் மக்கள் இயக்கத்தினர் சுயேச்சையாக போட்டியிட்டுக்கொள்ளலாம் முடிவெடுத்திருப்பதாகவும் அதற்கு விஜய்யும் ஒப்புதல் வழங்கிவிட்டார் எனவும் தகவல் வெளியானது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகிகளிடம் கேட்கையில், ”இது வழக்கமான முறை. ஏற்கனவே நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டிருக்கின்றனர். அதில் வெற்றியும் அடைந்திருக்கின்றனர்” என்றனர்.