சென்னை: சென்னை சைதாப்பேட்டை அரசுப் பண்ணையில் தமிழ்நாடு அரசின் வெள்ளத்தடுப்பு சிறப்பு நிதியில் இருந்து, 2 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை துணை மேயர் மகேஷ் குமார் தொடங்கி வைத்தார்.
முன்னதாக செய்தியாளர்களைச் சந்தித்த துணைமேயர் மகேஷ் குமார், "சென்னை முழுவதும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சைதாப்பேட்டை தொகுதியில் அரசுப் பண்ணை முதல் மற்றும் இரண்டாம் தெருக்களில் 2 கோடியே 19 லட்சம் ரூபாய் மதிப்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் சீரமைக்கும் பணிகளை வரும் செப்டம்பர் இறுதிக்குள் விரைந்து முடிக்கத் திட்டமிட்டு ஒப்பந்ததாரர்களிடம் அறிவித்துள்ளோம்.
கடந்த மழைக்காலத்தில் சென்னை தண்ணீரில் தத்தளித்ததைப்போல், இந்த மழைக்காலத்தில் பாதிப்புகள் இல்லாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக நானும், மேயரும், மாநகராட்சி அலுவலர்களுடன் தினசரி ஆய்வுக்கூட்டங்களை நடத்தி வருகிறோம். மெட்ரோ குடிநீர் இணைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. ஓரிரு மாதங்களில் செயல்பாட்டுக்கு வரும்.
கால்வாய்களில் நேரடியாக கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, கழிவுநீர் கலப்பது குறித்து புகார் தெரிவித்தால், மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும். மண்டலத்தின் அடிப்படை கட்டமைப்புப் பணிகளும், மண்டல கூட்டத்தில் செய்ய வேண்டிய பணிகளும் முறையாக செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஜூன் 20ஆம் தேதி 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்