சென்னை: சட்டபேரவையில் தொழில் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.பி முனுசாமி, "தமிழ்நாடு அரசு ஓசூரில் சிப்காட் மற்றும் புதிய விமான நிலையம் அமைக்கும் என தெரிவித்தற்கு நன்றி தெரிவித்து கொள்வதாகவும், ஓசூரில் விமான நிலையம் அமைந்தால், பெங்களூரு விமான நிலையத்தை விட பரபரப்பாக இருக்கும் எனவும் தெரிவித்தார். அதேபோல் கடந்த ஆட்சியில் பெறப்பட்ட முதலீடுகளை முதலமைச்சர் காகித கப்பல் என கூறியதாகவும் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "காகித கப்பல் என, தான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என விளக்கம் அளித்தார். மேலும், தொழில்துறையில் தமிழ்நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது என்றும், புதிய முதலீடுகளை பெறுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.
கடந்த 10 மாதங்களில் 69.37 லட்சம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் 131 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த ஒப்பந்தங்களை முதலீடாக கொண்டு வருவது முக்கியம் என்றும், புதிய முதலீடு, தொழிற்சாலை வேலைவாய்ப்புகள் சென்னையை சுற்றி மட்டும் இல்லாமல், தமிழ்நாடு முழுவதும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார்.