யானை கவுனி கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம் - காவல் ஆணையர் - Sowcarpet murder case
சென்னை: மாநிலத்தின் தலைநகரில் சட்டம் ஒழுங்கு சீராக உள்ளதாகவும் யானை கவுனி கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டதாகவும் மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கோயம்பேடு சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மெட்டுக்குளம் பகுதியில் நவீன தொழில் நுட்பம் மூலம் வடிவமைக்கப்பட்ட LED சிக்னல்களை சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "மெரினா சாலைக்கு பிறகு உயர் தொழில் நுட்ப எல்.இ.டி சிக்னல் கோயம்பேடு பகுதியில் ஆரம்பித்துள்ளோம்.
இந்த பகுதியில் ஆம்னி பேருந்துகள், லாரிகள் ஆகியவை அதிக அளவில் செல்வதால் தூரத்தில் இருந்தே வாகன ஓட்டிகள் இதனை எளிதில் கண்காணிக்க முடியும். தீபாவளியையொட்டி போக்குவரத்து நெரிசல் இல்லாமல் இருக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
62 ரோந்து வாகனங்கள் போக்குவரத்தை சீராக்கும் பணியில் உள்ளனர். தீபாவளி பண்டிகை காலத்தில் போக்குவரத்தை சீர் செய்ய ஆயுதப்படை, சட்டம் ஒழுங்கு பிரிவில் இருக்கும் 10, 000 காவலர்களும் 3000 போக்குவரத்து காவலர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை அமைதியான நகரமாக உள்ளது. சட்டம் ஒழுங்கு சீராக உள்ளது. யானை கவுனி கொலை வழக்கில் குற்றவாளிகளை நெருங்கிவிட்டோம். வழக்கு விசாரணையில் உள்ளதால் வேறு தகவல்களை கூற முடியாது" என்றார்.