சென்னை: உலக வீடற்றோர் நாளை முன்னிட்டு, சாலையோரம் வசிக்கும் தனிநபர்கள், வீடற்றோரை மீட்டு மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் நடைபெற்றது.
இதனை அரசு முதன்மைச் செயலரும், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி நேற்று (அக்டோபர் 10) தீவுத்திடல் போர் நினைவுச் சின்னம் அருகிலிருந்து கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
பெருநகர சென்னை மாநகராட்சி பொதுச் சுகாதாரத் துறை சார்பில், ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 10ஆம் நாள் உலக வீடற்றோர் நாளை முன்னிட்டு, சென்னையில் சாலையோரம் வசிக்கும் தனிநபர்கள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், வீடற்றோர் ஆகியோரை மீட்டு மாநகராட்சி காப்பகங்களில் தங்கவைத்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் விழிப்புணர்வு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன.
பின்னர் செய்தியாளரைச் சந்தித்துப் பேசிய அவர், "சென்னை மாநகராட்சியில் 55 காப்பகங்கள் உள்ளன. இதுவரை ஆயிரத்து 667 வீடற்றவர்கள் கண்டறிந்து மீட்கப்பட்டு காப்பகங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் புதிதாக 29 காப்பகங்கள் வீடற்றவர்களுக்காகக் கட்டப்பட்டுவருகின்றன.
இதன்மூலம் மேலும் 3,000-க்கும் மேற்பட்டவர்களைத் தங்கவைக்க முடியும். வடகிழக்குப் பருவமழை தொடங்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டுவருகின்றன.
மழைநீர் அதிகம் தேங்கும் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, அனைத்துப் பகுதியிலும் தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், அதிகம் மழைநீர் தேங்கும் இடங்கள், 88 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:தாறுமாறாக உயர்ந்த தக்காளி விலை;பொதுமக்கள் அதிர்ச்சி!