சென்னை, புறநகர்ப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையின் தாக்கம் படிப்படியாகக் குறைந்தபோதிலும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளுக்குத் தொடர்ந்து நீர்வரத்து வந்த வண்ணம் உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் நீர்வரத்து அதிகளவில் ஏரிகளுக்கு வந்தடைகிறது எனப் பொதுப்பணித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சென்னை மெட்ரோ குடிநீர் வழங்கல் வாரியத்தின் இன்றைய புள்ளிவிவரங்களின்படி, பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்திற்கு இரண்டாயிரத்து 144 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. அணையிலிருந்து ஆயிரத்து 941 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதேபோல் செம்பரம்பாக்கம் ஏரிக்கு 520 கனஅடி நீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து 275 கன அடி உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. சோழவரம், செங்குன்றம் ஏரிகளிலிருந்தும் மழை நீர் திறந்துவிடப்படுகிறது.