காஞ்சிபுரம் மாவட்டம் கரிசங்கல் கிராமத்தில் மூன்று ஏக்கர் பரப்பளவில் 'கரிசங்கல் குட்டை' என்ற நீர்நிலை அமைந்துள்ளது. அந்தக் குட்டையில் 2014 ஆம் ஆண்டில் பஞ்சாயத்து தலைவர் தட்சிணாமூர்த்தியும் அவரது ஆட்களும் மணலை கொட்டி ஆக்கிரமித்துள்ளதாக குற்றாச்சாட்டு எழுந்தது. நீர்நிலை மீதான இந்த ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த நந்தகோபால், புருஷோத்தமன், கோபிநாத் ஆகியோர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருவாய் ஆய்வாளர் ஆய்வு செய்தபோது, பஞ்சாயத்து தலைவருக்கும், புகார்தாரர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக மணிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்த வருவாய் ஆய்வாளர், ஆக்கிரமிப்பு எனக் கூறி அதை அகற்ற வேண்டுமென கட்டாயப்படுத்துவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். இதில் மூவரும் கைதான நிலையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருந்தது.