தமிழ்நாட்டின் வக்பு போர்டு வாரிய தலைவராக அப்துல் ரகுமான் உள்ளார். அடுத்த 5 ஆண்டுகள் இந்த பதவியை வகிக்கும் அப்துல் ரகுமான் கடந்தாண்டு ஜூலை மாதம் பதவியேற்ற பின், தனது சொந்த காரில் தேசிய கொடி, தமிழ்நாடு அரசு முத்திரை மற்றும் சுழல் விளக்கு வைத்து வலம் வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
குடியரசு தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகள், கேபினட் அமைச்சர்கள், முதலமைச்சர்கள் உள்ளிட்ட சிலரே சுழல் விளக்கை பயன்படுத்த வேண்டும் என்பது விதியாகும். ஆனால், அதற்கு எதிராக தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் விதிகளை மீறி, தேசிய கொடி, அரசு முத்திரை, சுழல் விளக்குடன் காரில் பயணித்து வருகிறார். ஆகவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு வக்பு பாதுகாப்பு குழு அறக்கட்டளை தலைவர் எம்.அஜ்மல் கான் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்ததாக வழக்குப்பதிவு இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்காமல் கால தாமதம் செய்ததால், அஜ்மல் கான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் காவல் துறையினரை விசாரித்து வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவின் பேரில், சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீசார், வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான் மீது தேசிய கொடியை அவமதித்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அப்துல் ரகுமான் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் முதன்மை துணைத் தலைவராகவும், கடந்த 2009ஆம் ஆண்டு திமுக கூட்டணியில் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:படிப்பினை முடித்த மருத்துவர்களுக்கான பயிற்சியை உடனடியாக வழங்குக... ஓபிஎஸ்...