சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் மூத்தத் தலைவர் இல.கணேசன் முன்னிலையில், திமுகவிலிருந்து விலகிய வி.பி.துரைசாமி பாஜகவில் இன்று இணைந்தார். அவருக்கு பொன்னாடை மற்றும் பூங்கொத்து கொடுத்து வரவேற்ற எல்.முருகன், பாஜக உறுப்பினர் அட்டையையும் வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” திமுகவில் இருந்தவன் என்பதைவிட, திமுகவில் உழைத்தவன் என்றே சொல்லவேண்டும். எந்த நோக்கத்திற்காக திமுக உருவாக்கப்பட்டதோ அந்த நோக்கத்தில் இருந்து தடம் மாறி செல்கிறது. பாஜக முன்னேறிய சமுதாயத்திற்கு மட்டும் சொந்தமான கட்சி என்று எங்களுக்கெல்லாம் போதித்துவிட்டனர். ஆனால், இந்து, இஸ்லாமியர்,பிற்படுத்தப்பட்டோருக்கான கட்சிதான் பாஜக என உணர்நத காரணத்தால் தற்போது பாஜகவில் இணைந்துள்ளேன்.
அறிவாலயத்திலிருந்து கமலாலயம் செல்லலாமா என்று கேட்கின்றனர். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்திலிருந்து ஒருவரை மாநிலத் தலைவராக நியமித்திருப்பது பாஜக ஒன்றுதான். சாதி இல்லை, மதம் இல்லை என்று நேரக்கணக்கில் பேசும் திமுகவில்தான், சாதிய வேறுபாடுகள் உரம் போட்டு வளர்க்கப்படுகின்றன. அதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். சாதிய ரீதியில் திமுகவைச் சேர்ந்த ஒருவர், அதிமுக அமைச்சரை சந்திக்கலாம், ஆனால் நான் பாஜக மாநிலத் தலைவரை சந்தித்தால் தவறா? சாதிக்கு ஒரு நீதியா?