இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னையில் 1,979 குடிசைப் பகுதிகளில் சுமார் 25 லட்சம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் உள்ள மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், முகக் கவசம் அணிதல், அடிக்கடி சோப்பு கொண்டு கை கழுவுதல், தன்சுத்தம் ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த தன்னார்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக மாநகராட்சியுடன் இணைந்து பணியாற்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் 2,500 களப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
களப் பணியாளர் ஒருவருக்கு 300 வீடுகள் என ஒவ்வொரு பகுதியிலும், உணவு, மளிகைப் பொருட்கள், குடிநீர், பொதுக்கழிப்பிடம் போன்ற காரணங்களுக்காக மக்கள் வெளியே சென்று வருவதை கண்காணித்து, கூட்டம் கூடாமல் இடைவெளி கடைபிடிப்பதை அறிவுறுத்துவார். ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்களின் வயது, பாலினம், முகவரி மற்றும் அலைபேசி எண் ஆகியவற்றை சேகரித்து, எளிதில் நோய்த் தொற்று ஏற்படக்கூடிய முதியோர், கர்ப்பிணிகள், நோய் பாதித்தவர்கள் ஆகியோரை கண்டறிந்து, தேவையான மருத்துவ சிகிச்சைகளுக்கு உதவி புரிதல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள்.