சென்னை: இது குறித்து அவர் இன்று (ஜூலை 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், "1890ஆம் ஆண்டு தொடங்கி கடந்த 130 ஆண்டுகளாக காவிரி விவகாரம் என்பது இரு மாநிலங்களுக்கிடையே தீராத பிரச்னையாக, உறவுகளைச் சீர்குலைக்கும் சிக்கலாக நீடிக்கிறது. 'நடந்தாய் வாழி காவேரி' என்று பாடும் நம்மை 'நின்றாய் நீ காவேரி' என்று வாடும் நிலைக்குத் தள்ளுகிறது கர்நாடக அரசு.
தடையேதுமின்றி ஓடிக்கொண்டிருக்க வேண்டிய நதியில் ஏற்கனவே பல அணைகளைக் கர்நாடக அரசு கட்டிவிட்டது. மேலும் ஒரு அணையைக் கட்டி தமிழ்நாடு விவசாயிகளின் வாழ்வை கேள்விக்குறியாக்க நினைக்கும் கர்நாடக அரசின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
இருமாநிலங்களும் தங்களுக்குள் தீர்த்துக்கொள்ளமுடியாமல் போகும் நதிநீர்ப் பங்கீட்டுப் பிரச்னைகளை உரிய வழிமுறைகளின் மூலம் தீர்த்துவைக்கவேண்டிய தார்மீகப்பொறுப்பு, அரசியல்சாசனப் பொறுப்பு மத்திய அரசிற்கு இருக்கிறது. ஆனால், துரதிஷ்டவசமாக மத்திய அரசு அதை உணரவில்லை என்பதே வரலாறு.
என்னதான் நிலைபாடு?
தமிழ்நாட்டின் சார்பாக நமது நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன், மத்திய ஜல்சக்தித் துறை அமைச்சரைச் சந்திக்கும் போது, அவரிடம் உங்கள் விருப்பமில்லாமல் மேகதாது அணை கட்ட அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்திருந்தார்.