தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு முடித்து வைப்பு - ஏன் தெரியுமா?

வி.கே.சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கை கைவிடுவதாக வருமான வரித்துறை தெரிவித்ததை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம்; அவருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு முடித்து வைப்பு
சசிகலாவிற்கு எதிரான செல்வ வரி வழக்கு முடித்து வைப்பு

By

Published : Aug 4, 2022, 6:42 PM IST

கடந்த 1996-97ஆம் ஆண்டு மதிப்பீட்டிற்கான செல்வ வரி கணக்கை தாக்கல் செய்யவில்லை எனக்கூறி மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி வி.கே.சசிகலாவிற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு 2001ஆம் ஆண்டு சசிகலாவின் அதிகாரம் பெற்ற நபர் பதில் அளித்திருந்தார்.

அந்த விளக்கத்தில் குறிப்பிட்டிருந்த தகவலின் அடிப்படையில், 1996-97ஆம் மதிப்பீட்டு ஆண்டில் சசிகலாவின் சொத்து மதிப்பு 4 கோடியே 97 லட்சத்து 52 ஆயிரத்து 100 ரூபாய் என தீர்மானித்த வருமான வரித்துறை மதிப்பீட்டு அலுவலர், செல்வ வரியாக 10 லட்சத்து 13 ஆயிரத்து 271 ரூபாயை செலுத்த சசிகலாவிற்கு உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சசிகலா தாக்கல் செய்த விண்ணப்பத்தை பரிசீலித்து ஏற்றுக்கொண்ட வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம், சட்டத்திற்குட்பட்டு மீண்டும் மதிப்பீடு செய்யவும், 40 லட்சம் ரூபாய் கடனை கணக்கீட்டில் சேர்த்துக்கொள்ளவும் மதிப்பீட்டு அலுவலருக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வருமானவரித்துறை ஆணையர் தரப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. இதேபோல சசிகலாவின் உறவினர் இளவரசிக்கு எதிராகவும் வழக்குத் தொடரப்பட்டது. பின்னர், நிலுவையில் இருந்த இந்த வழக்குகள் நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வருமான வரித்துறை தரப்பில், வருமான வரித்துறையில் 1 கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய வழக்குகளை கைவிடுவது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் சசிகலா மற்றும் இளவரசி மீதான செல்வ வரி தொடர்பான நடவடிக்கையை கைவிடுவதாகவும், அதனடிப்படையில் வழக்குகளை திரும்பப்பெறுவதாகவும் தெரிவித்தது.

இதனை ஏற்ற நீதிபதிகள், வருமான வரித்துறை தரப்பில் சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை முடித்துவைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க:சஞ்சய் ராவத்திற்கு ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details