கடற்கரை மற்றும் நீர்நிலைகளில் விநாயர் சிலையை கரைக்க தனிநபர்களுக்கு எந்த தடையும் இல்லை என்ற தமிழ்நாடு அரசின் அரசாணையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால், விநாயகர் சதுர்த்தியன்று பொது வெளியில் சிலைகள் வைத்து வழிபடவும், ஊர்வலமாக எடுத்து செல்லவும், கடலில் கரைக்கவும் தடை விதித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இத்தடை உத்தரவை எதிர்த்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த இல.கணபதி என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், "பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும் ஊர்வலமாக எடுத்துச்சென்று கடலில் கரைக்கவும் அரசு அனுமதிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், "ஆண்டாண்டு காலமாக கொண்டாடப்பட்டு வரும் விநாயகர் சதுர்த்தி மக்களின் மத்தியில் உணர்வு பூர்வமான ஒன்று. பெரிய அளவிலான ஊர்வலங்களை அனுமதிக்க முடியாது என்பதில் மாற்றுக்கருத்தில்லை. ஆனால் ஏதேனும் தளர்வுகள் அறிவிக்க வாய்ப்புள்ளதா? சிலையை வைத்து வழிபட்ட பின் 5 அல்லது 6 நபர்களுக்கு மிகாமல் ஊரடங்கு விதிகளை பின்பற்றி பொதுமக்கள் அதனை பெரிய கோயில்கள் அருகில் கொண்டு வைத்து விடுவது அல்லது தாங்களே சொந்தமாக இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்று கடற்கரையில் வைத்து விடுவது உள்ளிட்டவை அனுமதிக்க சாத்தியக்கூறுகள் உள்ளதா? என கேள்வி எழுப்பி, அதற்கு அரசு விளக்க மளிக்க வேண்டும்" என உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு மீண்டும் நீதிபதிகள் எம்.எம் சுந்தரஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (ஆக.21) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து முன்னணி சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "இந்து முன்னணியினர் சார்பில் நிறுவப்பட்டுள்ள ஒரு லட்சத்து 50 ஆயிரம் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லாமல், உரிய பட்டா நிலத்தில் மூன்று பேர் எடுத்துச் சென்று கரைப்பர்" எனத் தெரிவித்தார்.
அதையடுத்து அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், "பொது இடங்களில் சிலைகள் வைக்கவும், ஊர்வலமாக எடுத்துச் செல்ல மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வீடுகளில் வைத்து வழிபடும் விநாயகர் சிலைகளை எடுத்துச் செல்லவும், நீர்நிலைகளில் கரைக்கவும் எந்த தடையும் விதிக்கவில்லை.
வழிபாடு நடத்த தடை செய்ய வேண்டும் என்பது அரசின் எண்ணமல்ல. ஐந்து மாதங்களாக கோயில்கள் மூடப்பட்டுள்ளன. மெரினா கடற்கரை மூடப்பட்டுள்ளது" என வாதாடினார். அதன்பின் நீதிபதிகள், "குடியிருப்பு மற்றும் கோயில்கள் முன் வைக்கப்படும் சிலைகளை வழிபடுவதும், அவற்றை நீர்நிலைகளில் கரைப்பதும்தான் பல ஆண்டுகளாக பின்பற்றப்படுகிறது.
தமிழ்நாடு அரசின் அரசாணையில், தனிநபர்கள் சிலை வைத்து வழிபடவும், கரைக்கவும் எந்தத் தடையும் விதிக்கவில்லை. பொது இடத்தில் வைக்கவும், ஊர்வலம் செல்லவும்தான் தடை விதித்துள்ளது. எனவே வீட்டில் வைத்து வழிபடும் சிலைகளை கரைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. தனிநபர்கள் சிலை கரைப்பதால் தொற்று பரவும் அபாயம் இல்லை.
மெரினாவில் சாந்தோம் முதல் நேப்பியர் வரை குழுவாக கடற்கரையில் சிலைகள் கரைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே தனிநபர்கள் சிலை கரைக்க விரும்பினால் பிற நீர்நிலைகளில் கரைக்கலாம். அதில் நேரம், தனிமனித விலகல் கட்டாயம் பின்பற்ற வேண்டும். எந்தவொரு அமைப்புகளும் ஊர்வலம் நடத்தக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் தடை உறுதி செய்யப்படுகிறது. அதில் ஏதேனும் விதிமீறல்கள் இருந்தால் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க அரசுக்கு அனுமதி வழங்கப்படுகிறது" எனத் தெரிவித்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க:இந்து முன்னணி உறுப்பினரிடம் இருந்து 33 விநாயகர் சிலைகள் பறிமுதல்!