கரோனா தொற்றின் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பிரபலங்கள் பலர் தினமும் தங்கள் குடும்பத்தில் நிலவிவரும் காட்சிகளைப் படமாகப் பதிவு செய்து வெளியிட்டு வருகின்றனர்.
அண்மையில் கிரிக்கெட் வீரர் கோலிக்கு அவரது மனைவி அனுஷ்கா சர்மா முடி திருத்தம் செய்த காட்சிகள் இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், தற்போது தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்திற்கு, அவரது மனைவி ஹேர்கட் செய்துள்ள காட்சிகள் அதிவேகத்தில் பரவி வருகிறது.
அதி நவீன தொழில் நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி, எடுக்கப்படும் திரைப்படத்திற்கு உள்ள ரசிகர்களை விட அவ்வப்போது வெளியாகும் இது போன்ற வீடியோக்களுக்கு லைக்குகளும் சேர்களும் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு தேமுதிக விழா மேடை ஒன்றில், பிரேம லதா சொல்ல சொல்ல விஜயகாந்த் பேசிய காட்சிகள் வைரலாகின. அப்போது, "குரல் கேப்டனோடது... ஸ்கிரிப்ட் பிரேமலதாவோடது" போன்ற விதமான கருத்துகளை நெட்டிசன்கள் பகிர்ந்தனர். ஆனால், இப்போது வெளியாகியிருக்கும் இந்த வீடியோ அரசியல் மேடைகளில் ஆவேசமாகப் பேசும் பிரேமலதாவா இது என்ற கேள்வியை எழுப்புகிறது.
பேசிக்கொண்டே விஜயகாந்திற்கு ஹேர்கட் செய்யும் பிரேமலதா, "தற்போது கரோனா பாதிப்பால் பாதுகாப்பு நடவடிக்கையாக நானே இதை செய்கிறேன். நான் முடி கட் செய்து விடுவது ஒன்றும் புதிதல்ல. அமெரிக்காவில் இருக்கும் போது அவருக்கு நான்தான் ஹேர்கட் செய்து விடுவேன்" என்றார். முதலில் முடி வெட்டி பின்பு கிர்தாக்களை டிரிம்மிங் மற்றும் ஷேவிங் செய்கிறார். இதையெல்லாம் முடித்துவிட்டு அவரின் தலைமுடிக்கு டை அடித்து விடுகிறார்.
கேப்டனுக்காக முடிவெட்டும்போது, ”முடிவெட்டும் கலையில் இவர் தக்க அனுபவம் வாய்ந்தவர் போலும்" என்ற எண்ணத்தை பார்ப்போரிடையே எழுப்புகிறது.