தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

ரோல்ஸ் ராய்ஸ் கார் நுழைவு வரி விவகாரம்; நடிகர் விஜய் மீதான கருத்துகள் நீக்கம்! - Madras HC

சொகுசு கார் நுழைவு வரி விவகாரத்தில் நடிகர் விஜய் குறித்து தனி நீதிபதி தெரிவித்திருந்த கருத்துகளை நீக்க சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Vijay
Vijay

By

Published : Jan 25, 2022, 2:29 PM IST

Updated : Jan 25, 2022, 5:35 PM IST

சென்னை : ரோல்ஸ் ராய்ஸ் இறக்குமதி சொகுசுக் காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கின் உத்தரவில் நடிகர் விஜய் மீதான தனி நீதிபதியின் விமர்சனங்களை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் சொகுசு காரை இறக்குமதி செய்தார். இந்தக் காரை பதிவு செய்ய சென்னை வட்டார போக்குவரத்து அலுவலகத்தை அணுகிய போது, வாகனத்திற்கு நுழைவு வரி செலுத்த உத்தரவிடபட்டது.

நடிகர் விஜய்
இதையடுத்து, காரை இறக்குமதி செய்த போது, இறக்குமதி வரி செலுத்தியுள்ள நிலையில், நுழைவு வரி விதிக்க தடை விதிக்க வேண்டும் என நடிகர் விஜய் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நடிகர்கள் முறையாக உரிய நேரத்தில் வரி செலுத்த வேண்டும் என்றும், அவர்கள் உண்மையான ஹீரோக்களாக இருக்க வேண்டுமே தவிர ரீல் ஹீரோக்களாக இருக்கக் கூடாது என கருத்து தெரிவித்திருந்ததோடு, நடிகர் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டிருந்தார்.அபராதம் விதித்த தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்தும், தனி நீதிபதியின் தீர்ப்பில் உள்ள விமர்சனங்களை நீக்க கோரியும் நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையிட்டு வழக்கை விசாரித்த நீதிமன்றம் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும் என்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா மற்றும் முகமது ஷபீக் அமர்வில் கடந்த அக்டோபர் 25ஆம் தேதி இறுதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, நடிகர் விஜய் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, நிலுவை வரித்தொகையான 32 லட்சத்தை 30 ஆயிரத்தை கடந்த ஆகஸ்ட் 7ஆம் தேதி செலுத்தியாதாகவும், அது அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுவிட்டதால், தனி நீதிபதியின் உத்தரவு அமல்படுத்தப்பட்டுவிட்டதாகவும், எனவே நடிகர் விஜய்க்கு எதிரான நீதிமன்ற கருத்துக்களை தீர்ப்பிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
நுழைவு வரி வசூலிப்பதா? வேண்டாமா? என்பது 20 ஆண்டுகளாக இருந்த பிரச்சனை என்றும், சுங்க வரி விவகாரத்தில் மாநில அரசு சட்டம் இயற்ற முடியாது என்பதால், மத்திய அரசு தான் சட்டம் இயற்ற முடியும் என்றும், இறக்குமதி காருக்கு நுழைவு வரி வசூலிக்க தடை இருந்ததாலேயே 20 சதவீதம் செலுத்தப்பட்டு, தற்போது 80 சதவீதமும் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
நடிகர் விஜய் வழக்கு ஆவணங்களில் தொழிலை குறிப்பிடவில்லை என கூறியிருப்பதாகவும், அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

நடிகர்கள் நுழைவு வரி செலுத்தவதில்லை என்றும், வரி செலுத்துவதை தவிர்க்க வழக்கு தொடர்ந்திருப்பதாக கூறுவதும், ரசிகர்கள், உண்மையான கதாநாயகர் என நினைக்கும் நிலையில், ரீல் கதாநாயகராக இருக்க கூடாது, வரி செலுத்த மறுப்பது சட்டவிரோதம் போன்ற நீதிபதியின் கருத்துக்கள் தேவையற்றது என மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார். கடின உழைப்பால் கார் வாங்கப்பட்ட நிலையில் அதை நீதிபதி விமர்சித்து இருப்பது தேவையற்றது என்றும் வாதிட்டார்.

இந்நிலையில் விஜய் மீதான தனி நீதிபதியின் கருத்துகளை நீக்கி நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா, முகமது ஷபீக் தீர்ப்பளித்தனர்.

இதையும் படிங்க : குடும்பத்துடன் இணைந்தாரா விஜய்? ரசிகர்கள் மகிழ்ச்சி

Last Updated : Jan 25, 2022, 5:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details