நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப்பின் சட்டமாக்கப்பட்டுள்ள குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு, வடகிழக்கு மாநிலங்கள் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதேபோல், இச்சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அப்போது குடியுரிமைச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ” பெரும்பான்மை எனும் பெயரில் மோடி அரசு மிகவும் மோசமான ஃபாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதிகாரத்தை பயன்படுத்தி அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை கூறுபோட்டு விட்டார்கள். அதேபோல் இந்திய நீதித் துறையையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு விருப்பம்போல் தீர்ப்புகளை பெறும் முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதனடிப்படையில்தான் அயோத்தி தீர்ப்பையும் பெற்றிருக்கிறார்கள். அது சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பு என்பதைவிட, சாஸ்திரத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக அமைந்தது என்பதை நாடு அறியும். இப்போது அவர்களின் நீண்ட கால கனவுத் திட்டமான ராமர் கோவில் கட்டுவதற்கான தீர்ப்பையும் பெற்றுவிட்டார்கள்.