சென்னையை சேர்ந்தவர் சந்தோஷ். இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த பெண்ணுக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவெடுத்த நிலையில், நிலப்பிரச்சனை காரணமாக இரு குடும்பத்திற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதன் காரணமாக, தாங்கள் வசித்து வந்த பகுதியில் இருந்து வேறு பகுதிக்கு சந்தோஷின் குடும்பத்தினர் இடம்பெயர்ந்தனர்.
பின்னர், தனியார் பொறியியல் கல்லூரியில் சந்தோஷ் பி.டெக் படித்து கொண்டிருக்கும் போது, தன்னுடைய மகளை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்து விட்டதாகக் கூறி, ஏற்கனவே திருமணம் செய்ய முடிவெடுக்கப்பட்டிருந்த பெண்ணின் தாய் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அப்புகாரின் பேரில் கடந்த 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தோஷ் கைது செய்யப்பட்டார். பின்னர், 95 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சந்தோஷுக்கு பிணை வழங்கப்பட்டது. இதனிடையே சந்தோஷுக்கு எதிராக புகாரளித்த பெண்ணுக்கும் குழந்தை பிறந்தது. ஆனால், விசாரணையில் புகாரளித்த பெண்ணை சந்தோஷ் பாலியல் வன்கொடுமை செய்யவில்லை என டி.என்.ஏ சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு சந்தோஷ் விடுதலை செய்யப்பட்டார்.