சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் ரூ.1.56 கோடி மதிப்பீட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலையை இன்று (மே 28) குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், 'கருணாநிதி தனது சிந்தனை, யோசனை, சித்தாந்தங்களை மக்களிடம் வெளிப்படுத்திய விதம், மிகவும் சிறப்பானது; என்னுடைய இளம்வயதில் அது என்னை கவர்ந்துவிட்டது. எனக்கான அரசியல் பாதையும், கருணாநிதியின் நோக்கங்கள் குறித்த மாறுபட்ட கருத்தும் எனக்கு இருந்தது. ஆனால், கருத்தை அவர் வெளிப்படுத்தி மக்களை கவர்ந்த விதம் என்னையும் அந்த இளம் வயதில் கவர்ந்து விட்டது.
அவருடன் உரையாடுவதற்கான வாய்ப்புகள் எனக்கு கட்சியின் தலைவராக எனக்கு அமைந்தன. நான் தற்போது அரசியலில் இல்லை. அரசியலிலிருந்து விடைபெற்றுவிட்டேன், பொதுவாழ்க்கையில் சோர்வடையவில்லை. அதனால் தான் நாடு முழுவதும் சென்று மக்களை சந்தித்து அவர்களுடன் நேரம் செலவிடுகிறேன். தெளிவான சித்தாந்தம், அதில் பிடிப்பு, அர்ப்பணிப்பு, பக்தி, சுறுசுறுப்பு மற்றும் நல்லொழுக்கம் கொண்டவராக திகழ்ந்தார்.
கருணாநிதி இந்தியாவின் பன்முகத்தன்மை வாய்ந்த முதலமைச்சர்களில் ஒருவர் என்பதை நேர்மையுடன் என்னால் கூறமுடியும். முக்கியத்துவம் வாய்ந்த இந்த நிகழ்வுக்கு என்னை அழைத்தற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். சென்னை எனது மனதுக்கு நெருக்கமானது. என்னுடைய வாழ்க்கையிலும் முக்கிய இடம் வகிக்கிறது. என் சொந்த ஊரான நெல்லூருக்கு அருகில் இருப்பதால் ஆழ்ந்த செல்வாக்கு சென்னைக்கு என் மீது உள்ளது.