தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சென்னை பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாடு.. துணைவேந்தர் எஸ்.கௌரி மறுப்பு - Caste discrimination against caste teachers in Madras University

சென்னை பல்கலைக் கழகத்தில் பட்டியல் இனத்தவர்கள் சாதியப் பாகுபாடுடன் நடத்தப்படுவதாக தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் வைத்த குற்றச்சாட்டிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கௌரி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Aug 23, 2022, 8:01 AM IST

சென்னைபல்கலைக்கழகத்தில் பட்டியல் இனத்தவர்கள் சாதியப் பாகுபாட்டுடன் நடத்தப்படுவதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரின் குற்றம்சாட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்திற்கு பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ்.கௌரி மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று (ஆக.21) செய்தியாளர்களிடையே பேசிய துணைவேந்தர் எஸ்.கௌரி, கடந்த 12 ஆண்டுகளாக செயல்படாமல் இருந்து திராவிட ஆய்வு மையத்தினை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. மேலும் பட்டியலினத்தவர்களுக்கான பல்வேறு பதவி உயர்வுகளை பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில் தற்காலிக பதவிகளுக்கு இடஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படத் தேவையில்லை.

சென்னை பல்கலைக்கழகம்

மேலும் சிண்டிகேட்டில் விவாதிக்கப்பட்டு பின்பற்றப்படுகிறது. சென்னை பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத்தலைவருக்கு அறை, அலுவலகம் போன்றவை வழங்கப்படவில்லை என உண்மைக்கு புறம்பான செய்திகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தரமணி வளாகத்தில் மருத்துவ உயிர் வேதியியல் துறையில் CAS இல் விதிமுறைகளின்படி தேர்வுக்குழுவின், பதவி உயர்வின் படி சிண்டிகேட் மூலம் அங்கீகரிக்கப்பட்டது. மெரினா வளாகத்தில் இந்தித் துறையில் பணியாற்றும் பெண் ஆசிரியர் முதலில் தனக்கு மனநிறைவு இல்லை எனக் கூறி வேறு துறைக்கு பணியிடமாற்றம் கேட்டார். அவர் மீண்டும் அதேத் துறைக்கு பணியிடமாற்றம் வேண்டும் என கேட்டதால் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

சென்னை பல்கலைக்கழகத்தில் சாதியப் பாகுபாடு - தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் குற்றச்சாட்டு

பல்கலைக்கழகத்தில் உயர் பதவிகளான பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர், தொலை தூர கல்வி இயக்குனர், கல்வி மேம்பாட்டுக்குழுத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தேர்வுக் குழு முடிவு செய்கிறது. அதில், தனிப்பட்ட முடிவு அல்ல; தான் துணைவேந்தரான பிறகு பல தலித்துகளின் நீண்டகாலப் பிரச்சனைகள் தலித்துகளுக்கு ஆதரவாக அமைந்தன.

ஆட்சிமன்றக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு உறுப்பினரும் நன்றாக நடத்தப்படுகின்றனர். சிண்டிகேட் கூட்டம் மாதந்தோறும் நடத்தவேண்டும் என்று எந்த விதியும் கூறவில்லை. எந்தப் பல்கலைக்கழகமும் அப்படிச் செய்வதில்லை; சிண்டிகேட் உறுப்பினர்களுக்கும் இது நன்றாகத் தெரியும் என்று தன் மீதான குற்றசாட்டுகளை மறுத்துள்ளார்.

முன்னதாக, தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச் செயலாளர் சாமுவேல்ராஜ் முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், 'சென்னை பல்கலைக்கழகம்,தொலை தூர கல்வி நிறுவனத்தில் 23 உதவிப் பேராசிரியர் பதவிகளுக்கான தற்காலிக நியமனத்திற்கான (120 +120 நாட்களுக்கான நியமனம்) வெளியிடப்பட்ட அறிவிக்கையில் எஸ்.சி, எஸ்.சி (அ) எஸ்.டி, பி.சி, எம்.பி.சி உள்ளிட்ட பிரிவினருக்கான இட ஒதுக்கீடு பற்றி எதுவுமே குறிப்பிடப்படவில்லை. 45 நாட்களுக்கு மேலான தற்காலிக பணி நியமனங்களுக்கும் இட ஒதுக்கீடு நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமென்ற வழிகாட்டல்கள் (DOPT OM No 36036/3/2018/15.05.2018) மீறப்பட்டுள்ளன.

சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகத் துறைத் தலைவராக ஜூலை 1, 2021 இல் பதவி ஏற்ற பட்டியல் சாதி பெண் பேராசிரியருக்கு ஓராண்டு காலம் ஆகியும் துறைத் தலைவர் அறை வழங்கப்படவில்லை. தரமணி வளாகத்திலுள்ள மருத்துவ உயிர் வேதியல் துறையில் உள்ள பட்டியல் சாதியை சார்ந்த இணைப் பேராசிரியர் ஒருவருக்கு அனைத்து தகுதிகள் இருந்தும் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படவில்லை.

அப்பட்டமான சாதிய பாரபட்சம் அரங்கேற்றப்பட்டுள்ளது. மெரினா வளாகத்தில் இந்தித் துறையில் பணியாற்றும் ஒரு பட்டியல் சாதி பெண் ஆசிரியருக்கு பிராமண வகுப்பை சேர்ந்த துறைத் தலைவரால் சாதிய பாகுபாடும், துன்புறுத்தல்களும் இருக்கிறது என்று அவர் புகார் செய்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் செய்தவரை தொலை தூர கல்வி நிறுவனத்திற்கு துணை வேந்தர் மாற்றினார். சம்பந்தப்பட்ட பெண் பேராசிரியர் எதிர்ப்பு தெரிவித்ததால் அவருடைய இட மாற்றல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிண்டி வளாகத்தில் உள்ள கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஒரு பட்டியலினத்தை சேர்ந்த உதவி பேராசிரியர் பட்டியல் சமூகத்தினருக்கான தேசிய ஆணையத்தில் அந்த துறையின் தலைவர் மீது புகார் அளித்தார். அதன் மீது சென்னை மாநகர காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால் துணைவேந்தரின் தலையீட்டால், துறைத்தலைவர் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மாறாக, பட்டியலினத்தை சார்ந்த உதவி பேராசிரியரை சம்பந்தமே இல்லாத ஒரு துறைக்கு மாற்றி இருக்கிறார்கள். பல்கலைக் கழக உயர் பதவிகளான பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாடு அதிகாரி, தொலை தூர இயக்குனர், கல்லூரி மேம்பாட்டுக் குழு தலைவர், யு.எஸ்.ஏ.பி இயக்குனர் ஆகியவற்றிற்கு நேர்காணல்கள் நடந்து முடிந்துள்ளன. துணை வேந்தரின் அணுகுமுறையால், தமிழ்நாடு அரசின் உடனடி தலையீடு இல்லாவிட்டால், இதில் எந்தப் பதவிக்கும் பட்டியல் சாதி பேராசிரியர்கள் நியமனம் பெறமாட்டார்கள் என்ற சந்தேகம், அவ நம்பிக்கை நிலவுகிறது.

பல துறைகளில் அனுபவம் வாய்ந்த, பட்டியல் சாதி பேராசிரியர்கள் அவமானத்திற்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அவர்களுக்கு தகுதியும் ஆற்றலும் இருந்தும் எந்த பொறுப்பும் முக்கியத்துவமும் வழங்கப்படுவதில்லை என்ற குமுறல்கள் உள்ளன. பல்கலைக் கழகத்தில் உள்ள ஆட்சி மன்றக் குழு, பேரவை மற்றும் கல்வி அலுவல் குழுக்களை துணை வேந்தர் சிறிதளவும் மதிப்பதில்லை. தன்னிச்சையான முடிவுகளை திணிப்பதையே வாடிக்கையாக அவர் வைத்துள்ளார்.

குறிப்பாக ஆட்சி மன்றக் குழு மாதம் ஒரு முறை நடைபெற்று வந்த வழக்கத்தை இவர் உடைத்துவிட்டார். இவர் பதவிக்கு வந்த காலத்தில் இருந்து மூன்று அல்லது நான்கு மாதமாக கால இடைவெளியாக நீண்டு விட்டது. அக் கூட்டங்களிலும் யாரையும் சுதந்திரமாக பேச அனுமதிப்பதில்லை. குறிப்பாக பட்டியலினப் பேராசிரியர்கள் கேள்விகளை எழுப்பினால் தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி பழி வாங்குகிறார் என்ற குற்றச் சாட்டுக்கள் உள்ளன.

துணை வேந்தர் பேரா. கௌரி ஆகஸ்ட் 2020 இல் பதவி ஏற்ற காலத்தில் இருந்து இத்தகைய சாதிய பாகுபாடுகள் சட்டத்தை மீறி, மரபுகளை மீறி வெளிப்படைத்தன்மை இல்லாமல் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 165 ஆண்டு பாரம்பரியம்மிக்க சென்னைப் பல்கலைகழகத்தில் இத்தகைய சாதிய பாகுபாடுகள், சமூக நீதிக்கு எதிரான செயல்பாடுகள், சட்ட மீறல்கள் அரங்கேறுவதை தடுக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வேண்டுகிறோம்' என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆண் அமைச்சர்கள் இருந்தால் பெண் அமைச்சரை பின்னர்தான் வரவேற்கின்றனர்... அமைச்சர் கீதா ஜீவன் வருத்தம்

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details