சென்னை: தமிழ்நாடு அரசு தைப்பூச நாளை அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. இதனால் அந்தத் தேதியில் நடைபெற இருந்த கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான நேர்காணல் தேதி மாற்றப்பட்டுள்ளதாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "கால்நடை உதவி மருத்துவர் பதவிக்கான காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தப் பதவிக்கான நேர்முகத் தேர்வு ஜனவரி 4ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதிவரை நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசால் 28ஆம் தேதி பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அன்று நடைபெற இருந்த நேர்முகத் தேர்வு ஜனவரி 29, 30ஆம் தேதிக்கு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த விவரங்கள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஜனவரி 28ஆம் தேதி நேர்முகத் தேர்விற்கு அடைக்கப்பட்டிருந்த விண்ணப்பதாரர்கள் தேதி மாற்றப்பட்ட அழைப்பாணையை www.tnpsc.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நேர்முகத் தேர்விற்கான அழைப்பாணை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டுமென எஸ்எம்எஸ் மற்றும் இ-மெயில் மூலமும் தகவல் அனுப்பப்பட்டுள்ளது.