தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / city

சட்டப்பேரவையில் குட்கா கொண்டுவந்த விவகாரத்தில் இன்று தீர்ப்பு

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை கொண்டுசென்றதாக திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட 18 சட்டப்பேரவைத் உறுப்பினர்களுக்கு வழங்கிய உரிமைக்குழு நோட்டீஸை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப். 10) தீர்ப்பு வழங்குகிறது.

madras high court
சென்னை உயர் நீதிமன்றம்

By

Published : Feb 10, 2021, 11:07 AM IST

Updated : Feb 10, 2021, 11:21 AM IST

கடந்த 2017ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டுவந்ததாக பேரவை உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உள்பட 21 திமுக எம்எல்ஏக்கள் தாக்கல்செய்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, நோட்டீஸில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி அதை ரத்துசெய்தது. இருப்பினும் தவறுகளைக் களைத்து புதிய நோட்டீஸ் அனுப்பலாம் எனத் தெரிவித்திருந்தது.

இதையடுத்து, உரிமைக்குழு கூடி மீண்டும் அனுப்பிய இரண்டாவது நோட்டீஸை எதிர்த்து மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்களும், திமுகவிலிருந்து நீக்கப்பட்ட கு.க. செல்வமும் தனித்தனியாக வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, நோட்டீஸுக்கு இடைக்காலத் தடைவிதித்தார். இடைக்காலத் தடையை நீக்கக் கோரி சட்டப்பேரவைச் செயலாளர், உரிமைக்குழு சார்பில் தாக்கல்செய்யப்பட்ட மனுக்களும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணையில் உள்ளது.

இடைக்காலத் தடையை எதிர்த்த வழக்கில் அரசுத் தரப்பில் முன்னிலையான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவுப்படி, ஏற்கனவே வழங்கப்பட்ட நோட்டீஸில் இருந்த தவறுகள் திருத்தப்பட்டு, உரிமை குழு புதிய நோட்டீஸை வழங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.

உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடைசெய்யப்பட்ட குட்கா பொருள்களை கொண்டுவந்து காட்சிப்படுத்தியதற்கு என சுட்டிக்காட்டி இருந்ததாகவும், தற்போது அனுப்பப்பட்டுள்ள இரண்டாவது நோட்டீஸில் சபாநாயகரின் அனுமதியின்றி குட்கா பொருளை காண்பித்ததற்காக எனத் திருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவை செயல்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தியதால், எதிர்க்கட்சித் தலைவர், உறுப்பினர்கள் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்த சபாநாயகர், உரிமைக்குழுவை விசாரிக்க உத்தரவிட்டதாகவும், அதன் பேரிலேயே இரண்டாவது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எந்தெந்த பொருள்களைக் கொண்டுவருகிறோம் என கொண்டுவருவதற்கு முன் அனுமதி பெற வேண்டுமென ஏதேனும் வழிமுறை உள்ளதா? எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அரசு சார்பில், எது உரிமை, எது உரிமை மீறல் என்பதற்கு ஏதும் நாடாளுமன்றத்தாலோ? சட்டப்பேரவையிலோ? வரையறை செய்யப்படவில்லை எனவும், மரபு மற்றும் பாரம்பரிய நடைமுறைகள் அடிப்படையில் அவை முடிவு செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.

ஒரு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்துகொண்டிருக்கும்போது புகை பிடிக்கக்கூடாது என எந்த விதியும் இல்லாதபோதும், அது நீதிமன்றத்தில் கடைப்பிடிக்க வேண்டிய அடிப்படை ஒழுக்கம் என்பதைப் போல்தான் சட்டப்பேரவை நடவடிக்கையும் எனத் தெரிவித்தார்.

பேச்சுரிமை என்ற போர்வையில், தடைசெய்யப்பட்ட பொருளை ஊக்குவிக்கும் வகையிலான செயலை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ளதாகவும், இது சட்டப்பேரவை நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்கும் செயல் எனவும் தெரிவித்தார்.

சபாநாயகர் உரிமைக்குழுவுக்குப் பரிந்துரைத்துள்ள நிலையில், உரிமைக்குழு அதன் முடிவை பேரவையில் தாக்கல்செய்யும் எனவும், அதன் பின்னர் பேரவைதான் இதில் இறுதி முடிவெடுக்கும் எனத் தெரிவித்த அவர், பேரவையின் இறுதி முடிவை எதிர்த்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வழக்குத் தொடரும்பட்சத்தில், அப்போதுதான் இதில் நீதிமன்றம் தலையிட முடியும். தற்போது இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லையென வாதிட்டார்.

தொடர்ந்து, திமுக தரப்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள் சண்முகசுந்தரம், என்.ஆர். இளங்கோ, அமித் ஆனந்த் திவாரி, கு.க. செல்வம் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர், உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீசை தலைமை நீதிபதி அமர்வு ரத்துசெய்தபோது, இந்த விவகாரம் நடந்து மூன்றாண்டுகள் ஆகிவிட்டதால், அதனை அடிப்படையாக வைத்து தற்போது தண்டிக்க முடியாது எனவும், தற்போதைய நிலையிலும் தலைமை நீதிபதி அமர்வின் உத்தரவை பொருத்திப் பார்க்க வேண்டுமென வாதிட்டனர்.

உரிய காரணங்கள் ஏதுமின்றி சபாநாயகர் பரிந்துரைத்தார் என்ற காரணத்துக்காக மட்டுமே, உரிமைக்குழு இந்த விவகாரத்தில் தங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தனர்.

உரிமைக்குழு அனுப்பிய முதல் நோட்டீஸில், தடைசெய்யப்பட்ட பொருள்களைக் கொண்டுவந்ததாகச் சுட்டிக்காட்டப்பட்டு அது உயர் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது சபாநாயகர் அனுமதி இல்லாமல் கொண்டுவந்தார்கள் எனப் பெயருக்கு திருத்தம் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.

உரிமைக்குழுத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், திமுக தலைவர் ஸ்டாலின் மீது உயர் நீதிமன்றத்தில் மான நஷ்ட வழக்கு தொடுத்துள்ளதாலும், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்களைத் தகுதிநீக்கம் செய்யக்கோரி திமுக சார்பில் வழக்குத் தொடர்ந்துள்ளதாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி வெளிப்படக்கூடும் என்பதால், உரிமைக் குழுவில் இருந்து தாங்களாகவே ஓபிஎஸ், பொள்ளாச்சி ஜெயராமன் விலகிக் கொள்ள வேண்டுமெனவும், தேவைப்பட்டால் சபாநாயகர் புதிய குழுவை அமைத்துக் கொள்ளட்டும் எனத் தெரிவித்தனர்.

அனைத்துத் தரப்பு வாதங்களும் நிறைவடைந்து கடந்த டிசம்பர் 4ஆம் தேதி வழக்கின் தீர்ப்பை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார். இதையடுத்து வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்குகிறது.

இதையும் படிங்க: மதுரையில் மெட்ரோ ரயில் - அரசிடம் விளக்க பெற நீதிமன்றம் உத்தரவு

Last Updated : Feb 10, 2021, 11:21 AM IST

ABOUT THE AUTHOR

...view details