சென்னை பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் ஒன்பதாம் ஆண்டு பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் தலைமையில் நடைபெற்றது. பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
அப்போது, இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் செயலாளர் மற்றும் தலைவர் ஜி. சதீஷ் ரெட்டி, லாஜிஸ்டிக் நிறுவன தலைவர் எஸ்.சேவியர் பிரிட்டோ, தடகள வீராங்கனை பி.டி. உஷா ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டங்களை வழங்கினார்.
மேலும், 2,345 மாணவ மாணவிகளுக்கு பட்டங்களையும் அவர் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “பெண்களின் கல்வியில்தான் நாட்டின் வளர்ச்சி அடங்கியுள்ளது. ஒரு பெண் கல்வி கற்றால் அந்தக் குடும்பமும், சமுதாயமும் முன்னேறும்.
பட்டம் பெற்ற மாணவர்கள், ஆசிரியர்கள், அரசியல்வாதிகள் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ள அனைவரும் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருக்க வேண்டும். உலகின் வளர்ச்சியடைந்த மூன்றாவது பெரிய நாடாக இந்தியா மாறிவருகிறது. விரைவில் முதல் இடத்திற்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.
இந்தியாவின் கல்வி வளர்ச்சி பாராட்டும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக பெண்கள் கல்வி கற்க முன்வந்து கொண்டிருக்கின்றனர். பட்டம் பெற்றவர்களில் சரிபாதியினர் பெண்களாக இருப்பதை காணும்போது உண்மையிலேயே மகிழ்ச்சியாக உள்ளது. இவர்கள் தொடர்ந்து கல்வி கற்று சமுதாயத்தில் நல்ல நிலையில் உயர வேண்டும் என்று நான் வாழ்த்துகின்றேன்.
இந்தியாவில் சரி பாதிக்கும் மேலாக இளைஞர்கள் உள்ளனர். இது இந்தியாவின் மிகப்பெரிய பலம். இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்குத் தொடர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள், கல்வியுடன் தங்கள் உடல் நலத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டும். அது அவர்களின் வளர்ச்சியையும் நாட்டின் வளர்ச்சியையும் உறுதி செய்யும். நாளுக்குநாள் பெருகிவரும் தொழில் நுட்பங்களை இளைஞர்கள் தங்களின் முன்னேற்ற செயல்களுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தொழில்நுட்பத்தைக் கொண்டு தவறான பாதைக்கு ஒருபோதும் சென்று விடக்கூடாது.
மாணவர்கள் உலகில் உள்ள அனைத்து மொழிகளையும் கற்று தங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒருபோதும் தங்கள் தாய் மொழியை விட்டுக்கொடுக்கக் கூடாது. தாய்மொழி ஒவ்வொருவரின் சுய சிந்தனையை வளர்க்கும். ஆகவே ஒரு போதும் தாய்மொழியை எந்த நிலையிலும் மறந்துவிடக் கூடாது” என்றார்.