வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் நடந்து முடிந்து திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் எட்டாயிரத்து 141 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். கதிர் ஆனந்த் நான்கு லட்சத்து 85 ஆயிரத்து 340 வாக்குகளும், அதிமுக கூட்டணி வேட்பாளரான ஏ.சி. சண்முகம் நான்கு லட்சத்து 77 ஆயிரத்து 199 வாக்குகளும் பெற்றனர். வேலூர் தொகுதியிலும் வெற்றிபெற்று டெல்லியில் திமுக எம்.பி.க்களின் பலம் 24ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டு வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம், ஆம்பூர், கே.வி. குப்பம், வாணியம்பாடி என ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகள் வருகின்றன. இதில் ஆம்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கும், குடியாத்தம் சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இரண்டு மாதங்களுக்கு முன்பு சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது.
ஆனால், நடந்துமுடிந்த இந்த இரண்டு பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பெற்ற வாக்குகளைவிட தற்போது வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் குடியாத்தம், ஆம்பூர் ஆகிய தொகுதிகளில் திமுகவின் வாக்கு வங்கி சரிந்திருக்கிறது.
அதன்படி, ஆம்பூர் இடைத்தேர்தலில் திமுக பெற்ற வாக்குகள் 96 ஆயிரத்து 455 வாக்குகள் ஆகும். ஆனால் இந்தத் தேர்தலில் 17 ஆயிரத்து 84 வாக்குகள் குறைவாக பெற்று அத்தொகுதியில் 79,371 வாக்குகளைப் பெற்றுள்ளது. அதேசமயம் கடந்த இடைத்தேர்தலில் 58 ஆயிரத்து 688 வாக்குகளைப் பெற்ற அதிமுக இந்த முறை 12 ஆயிரத்து 80 வாக்குகள் அதிகம் பெற்று மொத்தம் 70 ஆயிரத்து 768 வாக்குகளைப் பெற்றுள்ளது.
இதேபோல், குடியாத்தம் இடைத்தேர்தலில் ஒரு லட்சத்து ஐந்தாயிரத்து 316 வாக்குகளைப் பெற்ற திமுக இம்முறை 22 ஆயிரத்து 429 வாக்குகள் குறைவாக பெற்று மொத்தம் 82 ஆயிரத்து 887 வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால் கடந்த முறை 78 ஆயிரத்து 155 வாக்குகள் பெற்ற அதிமுக, இந்த முறை 94 ஆயிரத்து 178 வாக்குகளைப் பெற்றுள்ளது.