இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "‘நீட்’ தேர்வில் 7.5 சதவிகித இட ஒதுக்கீடு அரசு பள்ளிகளில் பயின்று வெற்றி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கு அந்த இட ஒதுக்கீடு கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத கொடுமை ஏற்பட்டது. காரணம், தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துதான் மருத்துவப் படிப்பை முடிக்க முடியும். அங்கு அரசு மருத்துவக் கல்லூரி கட்டணங்களைவிட பன்மடங்கு அதிகம். தாங்கள் வசதியற்ற, ஏழை, கிராமங்களில் வசிக்கக்கூடிய மற்றும் வாழ்வாதாரத்தில் மிகவும் கீழே உள்ளவர்கள் என்பதால், தாங்கள் விலகுவதாக, மனம் உடைந்து எழுதிக் கொடுத்தனர்.
இப்போது - காலந்தாழ்த்தியாவது, தமிழ்நாடு அரசே அவர்களது கல்விக் கட்டணத்தை ஏற்கும் என்று முதலமைச்சர் அறிவித்திருப்பது நன்றிக்குரியது என்பதால், அவர்கள் எழுதிக் கொடுத்ததை மாற்றி, அவர்களையும் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படுத்தி, அவர்கள் நெஞ்சில் பால் வார்க்க வேண்டியது மனிதாபிமான அடிப்படையில் மிகவும் முக்கியமாகும்.
அதோடு, அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு, நீதிபதி பரிந்துரைப்படி 10 சதவிகித உள் ஒதுக்கீட்டை செயல்படுத்திடுவது அவசிய, அவசரமாகும்.
அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் பயன்பெறுவது முக்கியம்.