சென்னை: வேதா நிலையத்தை தமிழ்நாடு அரசு கையகப்படுத்தியதை எதிர்த்து தீபா, தீபக் தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி தான் விசாரிக்க வேண்டும் என இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகியை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோர் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து, தீபா மற்றும் தீபக்கை ஜெயலலிதாவின் வாரிசுகளாக அறிவித்ததுடன், அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி நீதிமன்றத்தில் எட்டு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய இருவருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லத்தை கையகப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டு, வீட்டு சாவியை தன்னிடம் ஒப்படைக்கக் கோரி தீபக்கும், வேதா நிலைய இல்லம் அமைந்துள்ள இடத்துக்கு 68 கோடி ரூபாய் இழப்பீடு நிர்ணயித்து அதை கையகப்படுத்தி, அந்த தொகையை நீதிமன்றத்தில் செலுத்த தென்சென்னை வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தீபாவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.