தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 22, 2021, 6:26 AM IST

Updated : Jun 22, 2021, 8:29 AM IST

ETV Bharat / city

அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை - விசிக பாராட்டு

சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரையை, 'அனைவருக்குமான அரசு இதுவெனக் காட்டும் ஆளுநர் உரை' என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பாராட்டியுள்ளது.

விசிக பாராட்டு
விசிக பாராட்டு

சென்னை: சட்டப்பேரவையில் ஆளுநர் உரை குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், "திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்று சட்டப்பேரவையில் ஆளுநர் நிகழ்த்திய உரை இந்த அரசு அனைவருக்குமான அரசு என்பதை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது.

ஆளுநர் உரை மன நிறைவு

புதிய அரசின் முன்னுரிமை, அதன் கொள்கை உறுதி ஆகியவற்றைப் புலப்படுத்தும்விதமாக ஆளுநர் உரை அமைந்திருப்பது மிகுந்த மனநிறைவை அளிக்கிறது. இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மனமார பாராட்டி வரவேற்கிறோம்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவுக் காலிப் பணியிடங்கள் கண்டறியப்பட்டு சிறப்பு நியமனங்களின் மூலமாக நிரப்பப்படும் என்ற அறிவிப்பை மகிழ்வோடு வரவேற்றுப் பாராட்டுகிறோம்.

வளர்ச்சிக்கான உரை

இந்தக் கோரிக்கையை கடந்த ஆட்சியின்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நாங்கள் வலியுறுத்திவந்தோம். புதிதாய் அமைந்திருக்கும் திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு எமது கோரிக்கைக்கு செவிசாய்த்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பெருநகரங்களையொட்டி துணை நகரங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு மக்கள் நெருக்கத்தைக் குறைப்பதோடு மட்டுமின்றி வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். கிராமப்புற மக்களுக்கு இடையூறு இல்லா வண்ணம் அது செயல்படுத்தப்படும் என்று நம்புகிறோம்.

தமிழ் உணர்வாளர்களுக்கு நம்பிக்கை

நதிநீர் உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகள் குறித்த தமிழ்நாடு அரசின் உறுதியான நிலைப்பாடு ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளது. அதனைப் பாராட்டி வரவேற்கிறோம். வேளாண் துறைக்கென தனி பட்ஜெட் என்ற அறிவிப்பு பாராட்டத்தக்கதாகும். உழவர்களோடு உழவுத் தொழிலாளர்களும் இதனால் பயனடைவார்கள்.

அரசு வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அதிலும் குறிப்பாகத் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை என்ற அறிவிப்பு இளைஞர்களுக்கு குறிப்பாக, தமிழ் உணர்வாளர்களுக்குப் பெரும் நம்பிக்கைத் தருவதாகும்.

ஆக்கப்பூர்வமான உரை

தமிழ்நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்கென நோபல் பரிசுபெற்ற, உலக அளவில் மதிக்கப்படும் பொருளாதார வல்லுநர்களைக்கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் ஆலோசனைக்குழுவானது, இந்த அரசு மக்கள் நலனில் காட்டும் அக்கறைக்குச் சிறந்த சான்றாகும்.

அடுத்துவரும் நிதிநிலை அறிக்கையில் இந்த அரசு அறிவிக்கவுள்ள திட்டங்களுக்கு கட்டியம் கூறுவதாக ஆளுநர் உரை அமைந்துள்ளது. மொத்தத்தில் பாராட்டி வரவேற்கத்தக்க ஆக்கப்பூர்வமான அறிவிப்புகளைக் கொண்ட உரை இது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Last Updated : Jun 22, 2021, 8:29 AM IST

ABOUT THE AUTHOR

...view details