சென்னை: சேலம் மாவட்டம் மோரூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பத்தை ஏற்றவிடாமல் தடுத்த காவல் துறையினரை குற்றஞ்சாட்டி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொடிக் கம்பத்தை ஏற்ற தடையாக இருந்த காவல் துறை, வருவாய் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. மேலும், ஓடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை பறிக்காதே எனவும் முழக்கமிடப்பட்டது.
விசிகவினரை காவல் துறை ஒடுக்குகிறது
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், “சேலம் மாவட்டத்தில் விசிக கொடியேற்றும் விவகாரத்தில் காவல் துறை முன்னிலையில் சாதிவாதிகள் வன்முறை நிகழ்த்தியுள்ளனர். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் விசிகவினரை காவல் துறை ஒடுக்குகிறது.
காவல் துறையின் போக்கு கண்டிக்கத்தக்கது. இது குறித்து நடவடிக்கை எடுக்க விரைவில் தமிழ்நாடு முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கவுள்ளோம். தற்போது, முதலமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது” என்றார்.