சென்னை: விசிக தலைவரை தனிப்பட்ட முறையில் மோசமாக விமர்சிக்கும் பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, மனுதர்மம் என்ற நூலில் பட்டியலின சமூகத்தினரை மிக தரக்குறைவாக மோசமாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
சமூக வலைதளங்களில் திருமாவளவன் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பாக, அவரை தனிப்பட்ட முறையில் மோசமாக சமூக வலைதளங்களில் பாஜகவினர் விமர்சிக்கத் தொடங்கினர். இதுதொடர்பாக விசிக கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
திருமாவளவன் பேச்சு தொடர்பாக சமூக வலைதளத்தில் பாஜக பிரமுகர் கல்யாணராமன் என்பவர், விசிக தலைவரை தனிப்பட்ட முறையில் மோசமான வார்த்தைகளை பயன்படுத்தி தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வருவதாகவும், மாநில பாஜக தலைவர் எல். முருகன், எச். ராஜா போன்றோரின் தூண்டுதல் காரணமாகதான் இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களை கல்யாணராமன் தொடர்ந்து வருவதாகவும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, இதன் பின்னணியில் இருக்கும் பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.
விசிக கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு பேட்டி தொடர்ந்து பேசிய அவர், மனு தர்மம் என்ற நூலில் பட்டியலின மக்களை குறித்து மிக மோசமாக குறிப்பிட்டுள்ளதாகவும், அந்த நூலை தடை செய்யாமல் திருமாவளவனை விமர்சிப்பது தரக்குறைவான செயல் எனக் கூறினார்.
மனு தர்மம் என்ற நூலை வரும் நாட்களில் எரித்து போராட்டம் நடத்த உள்ளதாக அவருடன் வந்திருந்த சமூக செயற்பாட்டாளரும், பேராசிரியருமான சுந்தரவல்லி தெரிவித்தார்.